திரை பார்க்காமல் இருந்தாலும் கண் எரிச்சலா? பின்னால் இருக்கும் உண்மை என்ன?
Dry and Irritated Eyes: திரை பயன்பாடு இல்லாவிட்டாலும் பலருக்கு கண் உலர்வு மற்றும் எரிச்சல் அதிகரித்து வருகிறது. கண்ணீரின் பாதுகாப்பு படலம் பாதிக்கப்படும் போது கண்கள் உலர்வு மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. குளிர்சாதன வசதி, காற்று மாசுபாடு மற்றும் தூசி போன்றவை கண் பிரச்சினையை அதிகரிக்கக்கூடும். நீண்ட நேரம் வாசிப்பு அல்லது வாகனம் ஓட்டும் போது கண் இமைப்பது குறைவதால் உலர்வு ஏற்படுகிறது.
இன்றைய காலத்தில் கண்கள் எரிச்சல், உலர்வு, மணல் இருப்பது போன்ற உணர்வு அதிகமாக இருப்பதாக பலர் கூறுகின்றனர். இதற்கு பெரும்பாலும் மொபைல் அல்லது கணினி திரை அதிகமாக பயன்படுத்துவதே காரணம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் கண் மருத்துவமனைகளில் அண்மைக் காலங்களில் மருத்தவர்கள் கவனிக்கும் நிலை வேறுபட்டதாக உள்ளது. திரை பயன்பாடு குறைவாக இருந்தாலும் பலருக்கு கண் உலர்வு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது மருத்துவ வட்டாரங்களில் கவனிக்கப்படுகிறது. கண்களின் மேற்பரப்பை பாதுகாக்கும் மெல்லிய கண்ணீர் படலம் பாதிக்கப்படும் போது இந்த பிரச்சினைகள் உருவாகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்ணீரின் பாதுகாப்பு படலம் பாதிக்கப்படும்போது
மனித கண்களின் மேற்பரப்பில் இருக்கும் கண்ணீர் படலம் மிகவும் முக்கியமான பாதுகாப்பு அமைப்பாக கருதப்படுகிறது. இந்த கண்ணீர் வெறும் தண்ணீர் அல்ல; இதில் எண்ணெய், புரதங்கள் மற்றும் பல பாதுகாப்பு கூறுகள் உள்ளன. இவை கண்களின் மேற்பரப்பை மென்மையாக வைத்திருக்கவும் தொற்றுகளைத் தடுக்கவும் உதவுகின்றன. இந்த சமநிலை பாதிக்கப்படும் போது கண்கள் உலர்வு, எரிச்சல் மற்றும் வலி போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்திய கண் மருத்துவ ஆய்வு இதழில் வெளியான ஆய்வின் படி வட இந்தியாவில் சுமார் 32 சதவீத மக்களுக்கு ‘ட்ரை ஐ’ எனப்படும் கண் உலர்வு பிரச்சினை காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. வயது, சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் இந்த நிலையை அதிகரிக்கச் செய்கின்றன என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
குளிர்சாதன வசதி மற்றும் காற்று மாசுபாடு தாக்கம்
நவீன நகர வாழ்க்கையில் குளிர்சாதன வசதிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அலுவலகங்கள், வீடுகள் மற்றும் வாகனங்களில் குளிர்சாதன வசதி தொடர்ந்து இயங்குவதால் காற்றின் ஈரப்பதம் குறைகிறது. இதனால் கண்களில் இருக்கும் கண்ணீர் விரைவாக ஆவியாகும் நிலை ஏற்படுகிறது. இதற்கு மேலாக தூசி மற்றும் காற்று மாசுபாடு கண்களின் மேற்பரப்பை மேலும் பாதிக்கக்கூடும். அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஆய்வுகளும் உள் காற்று மாசுபாடு மற்றும் உலர் காற்று கண் எரிச்சலை அதிகரிக்கக்கூடும் என்று குறிப்பிடுகின்றன.
Also Read: கடும் வெயிலில் உடல்நலத்தை பாதுகாக்க உதவும் எளிய வழிகள்
கண் இமைப்பின் முக்கியத்துவம்
மனிதர்கள் இயல்பாக கண்களை இமைப்பது ஒரு சாதாரண செயலாக தோன்றினாலும் அது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு முறை கண்களை இமைக்கும் போது கண்ணீர் கண்களின் மேற்பரப்பில் சமமாக பரவுகிறது. ஆனால் நீண்ட நேரம் வாசிப்பு, எழுத்து வேலை, தையல் அல்லது நீண்ட தூரம் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் கவனம் அதிகமாக இருக்கும் போது இமைப்பது குறைகிறது. இதனால் கண்ணீர் படலம் உடைந்து கண் உலர்வு அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அலர்ஜி மற்றும் உடல்நல காரணிகள்
காலநிலை மாற்றங்கள் அல்லது சுற்றுச்சூழல் அலர்ஜிகளும் கண் எரிச்சலுக்கான முக்கிய காரணமாக இருக்கலாம். தூசி, பூமரு, பூஞ்சை மற்றும் செல்லப்பிராணி முடி போன்றவை கண் சுற்றியுள்ள திசுக்களில் அழற்சியை ஏற்படுத்துகின்றன. இதனால் கண் அரிப்பு, சிவப்பு மற்றும் நீர்க்கண் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம். இதற்கு கூடுதலாக உடலில் நீர் குறைபாடு, போதிய தூக்கமின்மை மற்றும் சத்துக்குறைவான உணவு முறைகளும் கண் உலர்வை அதிகரிக்கக்கூடும் என்று கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவர்கள் கூறும் முன்னெச்சரிக்கை வழிகள்
கண் மருத்துவர்கள் கூறுவதாவது, கண் உலர்வு பெரும்பாலும் ஒரே காரணத்தால் உருவாகும் பிரச்சினை அல்ல. பல வாழ்க்கை முறை காரணிகள் ஒன்றாக இணைந்து இந்த நிலையை உருவாக்குகின்றன. போதிய அளவு தண்ணீர் குடிப்பது, நீண்ட நேரம் கவனம் தேவைப்படும் பணிகளில் இடைவெளி எடுப்பது மற்றும் காற்று தரத்தை மேம்படுத்துவது போன்ற சிறிய பழக்கவழக்க மாற்றங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன. மேலும் கண் எரிச்சல் நீண்ட காலமாக தொடர்ந்தால் கண் பரிசோதனை மேற்கொள்வது முக்கியம் என்று மருத்துவ வட்டாரங்களில் வலியுறுத்தப்படுகிறது. இது பார்வை குறைபாடு அல்லது நீண்டகால கண் உலர்வு நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவக்கூடும்.