விஜயுடன் பயணிப்பது கடினம்.. தனித்து நின்று தான் போட்டி – சீமான்..
Seeman - Vijay: 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்காது என கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விஜயுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் என்றும் எங்களுடைய அரசியல் பெரியார் இல்லாத அரசியல் எனவும் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல், ஜூலை 10, 2025: விஜயுடன் இணைந்து பயணிப்பது கடினம் என்றும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி கிடையாது என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகம் தங்களது அரசியல் நிலைப்பாட்டில் பெரியாரை சேர்த்துள்ளனர் எங்களுடையது பெரியார் இல்லாத அரசியலாகும் எனவே கூட்டணி அமைப்பது கடினம். மேலும் நாம் தமிழர் கட்சியின் கொடியும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடியையும் ஒன்று போல் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய நிலையில் அரசியல் கட்சிகள் தரப்பில் கூட்டணி பேச்சு வார்த்தைகள், தொகுதி பங்கீடு, பிரச்சாரப்பயணம், பூத் கமிட்டி ஏஜெண்டுகள் அமைப்பது என பல்வேறு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
தனித்து தேர்தலை சந்திக்கும் நாம் தமிழர் கட்சி:
நாம் தமிழர் கட்சி பொறுத்தவரையில் கட்சி தொடங்கியது முதல் தனித்து நின்று தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியவுடன் நாம் தமிழர் கட்சியுடன் கைகோர்க்கும் என பல்வேறு யூகங்கள் வெளியானது. ஆனால் இதனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மறுத்து கருத்து தெரிவித்திருந்தார்.
Also Read: சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது.. உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை..




த.வெ.க உடன் கூட்டணி கிடையாது:
தேர்தல் நடக்க இன்னும் சில மாத காலங்களை இருக்கக்கூடிய நிலையில் மீண்டும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள் அடிபட்டு வருகிறது. ஆனால் அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வெற்றிக்கழகத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்காது என தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ எங்களால் சமரசம் செய்து கூட்டணி அமைத்து தேர்தல் வெற்றியை அனுபவிக்க முடியாது. ஒரு தலைவர் இல்லை என்றாலும் அதன் பின் இருப்பவர்கள் அந்த தலைவரின் கொள்கையை பின்பற்றி கட்சியை நடத்த ஏதுவாக இருக்க வேண்டும். அதுதான் நல்ல தலைவருக்கு அழகு.
முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். அதனால் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நாம் தமிழர் கட்சி கொடிக்கும் தமிழகம் வெற்றி கழகத்தின் கட்சி கொடிக்கும் ஒற்றுமை இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சியை தமிழக வெற்றிக்கழகம் பின்பற்ற வருகிறது என்ற கருத்துக்கு நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
விஜயுடன் பயணிப்பது கடினம் – சீமான்:
எங்களுடைய அரசியல் பெரியார் இல்லாத அரசியல் ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவராக பெரியார் இருக்கிறார். அதனை எங்களால் நிச்சயமாக ஏற்க முடியாது. அதனால் விஜயுடன் இணைந்து பணியாற்றுவது கடினம்” என தெரிவித்துள்ளார்