சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது.. உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை..
Chennai High Court: சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை ஜூலை 10, 2025 முதல் அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழ்நாடு அரசு கோரிக்கையின் படி இந்த வழக்கு இன்று(ஜூலை 10, 2025) மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

சென்னை, ஜூலை 10,2025: தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் 2025, ஜூலை 10 ம் தேதி முதல் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி இந்த வழக்கு ஜூலை 10, 2025 தேதியான இன்று விசாரிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. மதுரை மற்றும் கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட், கன்னியாகுமரி மற்றும் எட்டுரவட்டம் டோல்வே பிரைவேட் லிமிடெட், சாலைப்புதூர் மற்றூம் மதுரை டோல்வே பிரைவேட் லிமிடெட் மற்றும் நாங்குநேரி மற்றும் கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்குகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தங்கள் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை நீண்ட நாட்களாக செலுத்தாமல் உள்ளதாகவும் நிலுவைத் தொகை இன்னும் 276 கோடியை செலுத்தாமல் உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிபதி:
சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பேருந்துகளை நிறுத்தி கட்டணம் வசூலிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் இது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், போக்குவரத்துக் கழகங்கள், நிலுவைத் தொகையைத் தீர்க்காமல், பிரச்சினையை நீட்டித்துக் கொண்டே இருந்தால், 300 கோடி முதல் 400 கோடிக்கு மேல் உயர்ந்துவிடும் என தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு விரைவாகச் செயல்படவில்லை என்றும், சுங்கச் சாவடிகளில் பேருந்துகளை நிறுத்தி தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், அவர்களால் அதைச் செய்ய முடியாமல் போகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசு பேருந்துகள் அனுமதிக்க தடை:
போக்குவரத்து கழகங்களின் இந்த நடவடிக்கையால், பொது மக்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்ட நீதிபதி, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகள் வழியாக 2025, ஜூலை 10 முதல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். மேலும், இந்த சுங்கச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
Also Read: நாம் தமிழர் கட்சி நடத்தும் ஆடு மாடுகள் மாநாடு.. மதுரை விராதனூரில் ஏற்பாடுகள் தீவிரம்..
வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிக்கை:
இந்நிலையில் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜராகி முறையிட்டார் இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார் அதன்படி இந்த வழக்கு இன்று அதாவது ஜூலை 10 2025 அன்று விசாரணைக்கு வருகிறது.