பரமக்குடியில் பரபரப்பு.. காவல் துணை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்… காவல்துறையில் பெரும் ஷாக்!
Paramakudi DSP Suspension : ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக மனைவி அளித்த புகாரின்பேரில், பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளரி ஜாபர் சித்திக்கை தமிழக உள்துறை செயலாளர் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார் .
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சப் டிவிஷனில் காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் ஜாபர் சித்திக். இவருக்கு, ஷோபனா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக சோபனாவை, அவரது கணவர் ஜாபர் சித்திக் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 4- ஆம் தேதி வேலூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி ஜாபர் சித்திக் மீது அவரது மனைவி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், காவல் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக்கை பணியிடை நீக்கம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, வேலூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி ஜாபர் சித்திக் மனைவி ஷோபனா அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக டிஎஸ்பி மீது புகார்
எனது கணவரும், பரமக்குடி சப் டிவிஷன் காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் ஜாபர் சித்திக் வேறு சில பெண்களோடு தொடர்பு வைத்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் தட்டிக் கேட்டபோது, அவர், என்னிடம் முறையான பதில் எதுவும் கூறாமல் என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். ஒரு கட்டத்தில், அவரிடம் திருமணத்தை மீறிய உறவு தொடர்பாக வலுக்கட்டாயமாக கேட்டேன். அது முதல் என்னை எனது கணவர் ஜாபர் சித்திக் கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தி வந்தார்.
மேலும் படிக்க: ரூ.45 ஆயிரம் லஞ்சம்.. திருப்பூர் கூட்டுறவு செயலர் உள்பட மூவர் கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் பொறியில் சிக்கிய பரபர சம்பவம்!




டிஎஸ்பியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை
இதன் காரணமாக, எங்களது திருமண உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் வேலூர் சி. பி. சி. ஐ. டி. போலீசார் பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று டி.எஸ்.பி. ஜாபர் சித்திக்கிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், சில ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் டிஎஸ்பி
இந்த நிலையில் தான் பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக்கை தமிழக உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். டிஎஸ்பி ஜாபர் சித்திக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். பெரும்பாலான இன்ஸ்டாகிராம் யூசர்கள் மத்தியில் பிரபலமான டிஎஸ்பி ஜாபர் சித்திக் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு.. அடுத்தடுத்து கைதாகும் அதிகாரிகள்.. முன்னாள் சார் பதிவாளருக்கு காப்பு!