செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது…. தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
Tamil Film Industry Strike : வருகிற செப்டம்பர் 1, 2026 முதல் புதிய தமிழ் படங்கள் வெளியாகாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி வெளியிட வேண்டும் என்ற திரையரங்க உரிமையாளர்களின் முடிவை எதிர்த்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,ஆகஸ்ட் 22 : வருகிற செப்டம்பர் 1, 2026 முதல் புதிய தமிழ் படங்கள் வெளியாகாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 22, 2026 இன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூட்டி, தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8 வார காலம் கழித்துதான் ஓடிடியில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான், அந்தந்த திரைப்படங்களை திரையரங்குளில் திரையிட அனுமதிக்க முடியும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.
இதையும் படிக்க : Arjun Das: விஜய் சாருக்கு அரசியலில் இன்ட்ரெஸ்ட் இருப்பதே எனக்கு தெரியாது – அர்ஜுன் தாஸ்!




மேலும், இந்த மாதிரியான முடிவு, தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நடைமுறையில் இல்லாதபோது, வேண்டுமென்றே தமிழ்நாட்டில் மட்டும் இந்த புதிய நடைமுறையை தன்னிச்சையாக புகுத்துவது கண்டிக்க தக்க ஒன்றாகும். இவ்வாறான முடிவினை எடுக்கும்போது தயாரிப்பாளர்களை அழைத்து பேசி யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவண்ணம் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேுலும், விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அப்படி தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவினை தயாரிப்பாளர்களான எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதை தெரிவிக்கிறோம். மேலும், வருடத்திற்கு 250க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகிறது. அதில் பெரும்பாலான திரைப்படங்களில் தயாரிப்பாளருக்கு முதலீடு செய்த தொகையில் பாதி அளவு கூட வராமல், ரூ.700 கோடிக்கு மேல் ஒவ்வொரு வருடமும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : கணவரால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்த சௌகார் ஜானகி – உருக்கமான சம்பவம்
அவ்வாறு பெரும் இழப்பினை சந்தித்தும் தயாரிப்பாளர்கள் தொழில் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே, விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தன்னிச்சையான முடிவினை கண்டித்து வருகிற செப்டம்பர் 1, 2026 தேதி முதல் தமிழ்த் திரையுலகில் புதிய புதி திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், தமிழ்த் திரையுலகில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பிலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்ப தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து முடிவெடுத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், மேற்படி பிரச்னையை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் கனத்திறகு கொண்டு சென்று, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அவர்களிடமும் எடுத்துரைத்து தமிழ்நாடு அரசு மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.