தவெக ஆட்சி நடத்த கம்யூனிஸ்ட் ஆதரவு வேண்டுமா? அல்லது… முதல்வர் விஜய்க்கு சண்முகம் கேள்வி!
Shanmugam Questioned CM Vijay : ஆட்சி நடத்த கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுமா அல்லது அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறீர்களா என்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக தலைமைச் செயலாளர் செயல்பட்டு வருவதாக கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் தலைமைச் செயலாளரை கண்டித்து மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இடதுசாரி மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவின்பேரில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் அடிப்படையில் கல்லூரிகளின் கல்வி ஆணையர் இந்த சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.
ஆட்சி நடத்த கம்யூனிஸ்ட் ஆதரவு வேண்டுமா
ஜனநாயக நாட்டில் இது போன்ற சம்பவம் எங்கும் நடந்தது கிடையாது. முதல்வர் விஜய் அதிகாரிகளை வைத்து ஆட்சி நடத்த போகிறீர்களா அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்து ஆட்சியை தொடர போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். மேலும் தலைமைச் செயலாளரின் இந்த நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். எனவே, அவர் தலைமைச் செயலாளராக நீடிப்பதற்கு தகுதி இல்லாத நபர். உடனடியாக, அவரை தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்த கருத்து சிறிதளவும் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.
மேலும் படிக்க: “திமுகவில் வயது வரம்பு அதிரடி!”.. 13 மாவட்டச் செயலாளர்கள் பதவிக்குச் செக்.. மு.க.ஸ்டாலின் அதிரடி!!




தலைமை செயலாளரை நீக்கம் செய்ய வேண்டும்
அதாவது, தவறுதலாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இந்த விவகாரத்துக்கு தமிழக அரசுக்கும், முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்புணர்வு உள்ளது. அதோடு, தலைமைச் செயலாளர் பதவி நீட்டிப்பில் தான் உள்ளார். எனவே, தலைமைச் செயலாளர் சாய் குமாரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி, திறமையான அதிகாரியை அந்த பொறுப்பில் பணி அமர்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டத்தின் பின்னணி
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜிலியம்பாறை வட்டாட்சியர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களின் தகவல்களை திரட்டுமாறு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இதை தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபடுவதை கொடுக்கும் விதமாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த இரண்டு அறிவிப்புகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக திரும்பப் பெறப்பட்டது. இதனை கண்டித்து தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “போர் அடிப்பதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் நாம் அல்ல.. கம்பேக் கொடுப்பதில் திமுக ஸ்பெஷலிஸ்ட்!”.. மு.க.ஸ்டாலின் முழக்கம்!!