AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“மாணவர் உரிமைகளைப் பறிப்பதா?” – தமிழ்நாடு தலைமைச் செயலரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி ஆர்ப்பாட்டம்!

CPM Protests in Chennai: கல்லூரி மாணவர் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படும் தமிழ்நாடு தலைமைச் செயலாளரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

“மாணவர் உரிமைகளைப் பறிப்பதா?” – தமிழ்நாடு தலைமைச் செயலரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி ஆர்ப்பாட்டம்!
சிபிஎம் சண்முகம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Aug 2026 12:04 PM IST

சென்னை, ஆகஸ்ட் 22: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களைக் கட்டுப்படுத்தும் வகையிலும், குறிப்பாக இடதுசாரி மற்றும் ஜனநாயக அமைப்புகளின் கீழ் இயங்கும் மாணவர் இயக்கங்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையிலும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனக் குரல்கள் வலுத்துள்ளன. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை விவகாரம் மற்றும் மாணவர் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பித்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தலைமையில் திரளான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க: “அவைகுறிப்பில் நீக்கியதை ரீல்ஸாக வெளியிட்டால் கடும் நடவடிக்கை!”.. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை!!

இது முற்றிலும் சட்டவிரோதமானது:

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலச் செயலாளர் பி. சண்முகம், தமிழ்நாடு அரசு மற்றும் தலைமைச் செயலாளர் மீது பலமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கடந்த ஜூலை 28-ஆம் தேதி தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையிலேயே, கல்லூரி கல்வி ஆணையர் மற்றும் உயர்கல்வித் துறைச் செயலாளர் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர்களுக்கும், கல்லூரிகளுக்கும் இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். ஜனநாயக நாட்டில் மாணவர்களின் அடிப்படை உரிமைப் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று என்றும், இது முற்றிலும் சட்டவிரோதமானது எனவும் சாடினார்.

உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்:

அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் தலைமைச் செயலாளர், அந்தப் பதவியில் நீடிப்பதற்குச் சிறிதும் தகுதியற்றவர் என்றும், எனவே தமிழ்நாடு அரசு அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளை இலக்கு வைத்துச் செயல்படுவதன் மூலம் தலைமைச் செயலாளரின் வலதுசாரி சித்தாந்தச் சாய்மானம் வெளிப்பட்டு நிற்பதாகவும், அரசு இயந்திரத்தைச் சுய நோக்கத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தும் இவரிடமிருந்து நியாயமான நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: “திமுகவில் அதிரடி மாற்றங்கள்!”.. மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடும் அவசரச் செயற்குழு கூட்டம்!!

திரும்பப் பெறப்பட்ட உத்தரவு:

இதனிடையே, மாணவர் அமைப்புகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இதற்குக் காரணமான தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது போராட்டங்கள் தொடரும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர். நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பும், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Follow Us