“பாதாள சாக்கடைப் பணி!”.. சென்னையில் மண் சரிந்து கழிவுநீர் தொட்டியில் ஒப்பந்த தொழிலாளி பரிதாப பலி!
Thiruvottiyur Sewage Tank Collapse: சென்னை திருவொற்றியூரில் 20 அடி ஆழ கழிவுநீர் தொட்டி தோண்டும் பணியின் போது ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி திருவண்ணாமலையைச் சேர்ந்த பூமிநாதன் என்ற ஒப்பந்தத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தியதே விபத்துக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை, ஆகஸ்ட் 22: சென்னை மாநகராட்சியின் வட சென்னை பகுதியான திருவொற்றியூரில் புதிதாகக் கழிவுநீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டு, ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் அமைக்கும் பணிகளின் போது முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததே இந்த உயிரழப்பிற்கு முக்கியக் காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க: வாரவிடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா?அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
20 அடி ஆழத்திற்குப் பள்ளம்:
திருவொற்றியூர் சாத்தாங்காடு கிராமத் தெருப் பகுதியில் குடியிருப்புவாசிகளுக்காகப் புதிதாகப் பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டு, உதவிப் பொறியாளர் மூலமாக 6-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதற்காகச் சாலையைத் தோண்டி சுமார் 20 அடி ஆழத்திற்குப் பள்ளம் எடுக்கப்பட்டு, நேற்றிரவு தொழிலாளர்கள் தீவிரப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
திடீரென ராட்சத மண் சரிவு:
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் 20 அடி ஆழப் பள்ளத்திற்குள் மூன்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென மேலிருந்து ராட்சத மண் சரிவு ஏற்பட்டது. இதில் சாதுரியமாகச் செயல்பட்டு மேலே இருந்த இரு தொழிலாளர்கள் உயிர் தப்பிய நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்ற தொழிலாளி மட்டும் 20 அடி ஆழப் பள்ளத்தில் மண் சரிவில் சிக்கிக்கொண்டார். கழுத்தளவு மண்ணில் சிக்கிய அவரை உடனடியாக மேலே மீட்க முடியாமல், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படிக்க: எம்எல்ஏக்களுக்கு கார்கள் தேர்வு செய்யும் பணி… தலைமைச் செயலகத்தில் அணிவகுத்த 5 மாடல் கார்கள்!
2 மணி நேரம் நடந்த போராட்டம்:
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட முயன்றனர். ஆனால், நிலைமை மோசமாக இருந்ததால் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி, மண் சரிவில் சிக்கிய பூமிநாதனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். எவ்வித அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், நள்ளிரவில் அபாயகரமான சூழலில் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்திய ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.