AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“100 கேள்விகள்.. சுழன்றடித்த அதிகாரிகள்!”.. லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் செந்தில் பாலாஜி!!

Tasmac Scam: டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 100க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“100 கேள்விகள்.. சுழன்றடித்த அதிகாரிகள்!”.. லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் செந்தில் பாலாஜி!!
செந்தில் பாலாஜி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Aug 2026 08:39 AM IST

சென்னை, ஆகஸ்ட் 22: தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். இந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: வாரவிடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா?அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!

41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை:

டாஸ்மாக் நிறுவனத்தில் மது பாட்டில்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலித்தது, மதுபானப் போக்குவரத்துக்கான ஒப்பந்தங்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான இடமாற்றங்களில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்கள், முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் மற்றும் மூத்த மண்டல அதிகாரிகளின் வீடுகள் உட்பட சுமார் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர். இந்தச் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினி சார்ந்த தகவல்களின் அடிப்படையில் தற்போது விசாரணை முடுக்கப்பட்டுள்ளது.

லுக் அவுட் நோட்டீஸ் விடுத்து தேடல்:

இந்த வழக்கில் முக்கிய நபரான ரதேஷ் என்பவர் தலைமறைவாக உள்ளதால், அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறார். இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜிக்கு, லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், சம்மன் அனுப்பப்படும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்:

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய சம்மனின் அடிப்படையில் செந்தில் பாலாஜி விசாரணைக்காக நேரில் வந்துள்ளார். சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், ரகசியக் கணக்குகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரித்து வைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட சரமாரி கேள்விகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரிடம் கேட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: எம்எல்ஏக்களுக்கு கார்கள் தேர்வு செய்யும் பணி… தலைமைச் செயலகத்தில் அணிவகுத்த 5 மாடல் கார்கள்!

அதிகாரிகள் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை:

குறிப்பாக, டாஸ்மாக் மதுபானப் போக்குவரத்துக்கான ஒப்பந்தங்களில் வழங்கப்பட்ட சட்டவிரோத சலுகைகள், பாட்டிலுக்குப் பத்து ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் இதில் கைமாறிய பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் அதிகாரிகள் தீவிரமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். விசாரணைக்குப் பின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை மற்றும் ரதேஷ் மீதான தேடுதல் வேட்டையின் முடிவுகள், இந்த வழக்கில் அடுத்து வரவிருக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us