பிரான்ஸில் கம்பீரமாக உருவெடுக்கும் பாரிஸ் BAPS சுவாமிநாராயண் ஆலயம்.. விரைவில் கும்பாபிஷேகம்!
BAPS Paris Temple: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் பிஏபிஎஸ் சுவாமிநாராயண் இந்து திருக்கோயில் விரைவில் திறக்கப்படவுள்ளது. சில்ப சாஸ்திர விதிகளின்படி கற்களால் செதுக்கப்பட்டு உருவாகும் இக்கோயிலின் கும்பாபிஷேக விழா மஹந்த் சுவாமி மஹாராஜ் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸின் கிழக்குச் புறநகர்ப் பகுதியான புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸ் பகுதியில், பிஏபிஎஸ் அமைப்பின் பிரம்மாண்ட சுவாமிநாராயண் இந்து திருக்கோயில் அமைக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பியக் கண்டத்தின் ஆன்மீக மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் ஒன்றாகத் திகழவுள்ள இக்கோயில், மிக விரைவில் கோலாகலமாகத் திறக்கப்பட்டுப் பொதுமக்களின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது.
ஐரோப்பியக் கண்டப் பகுதியில் அமையும் கோவில்:
View this post on Instagram
பாரம்பரிய இந்து சிற்பக் கலை வழிகாட்டியான ‘சில்ப சாஸ்திர’ விதிகளின்படி இந்த ஆலயம் முற்றிலும் கற்களால் செதுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள திறமையான கைவினைஞர்களால் கைமுறையாகச் செதுக்கப்பட்ட மணற்கற்கள் பிரான்ஸுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கே ஒன்றிணைக்கப்பட்டு இக்கோயில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 3,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் இக்கோயில், ஐக்கிய இராச்சியத்திற்கு வெளியே ஐரோப்பியக் கண்டப் பகுதியில் அமைக்கப்படும் மிகப்பெரிய கற்களாலான இந்து திருக்கோயில் என்ற பெருமையைப் பெறுகிறது.
மிக விமர்சையாக கும்பாபிஷேக விழா:
View this post on Instagram
வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ‘பாரிஸ் மந்திர் மஹோத்சவ்’ என்ற 13 நாள் கலாச்சாரத் திருவிழாவின் போது, பிஏபிஎஸ் அமைப்பின் தற்போதைய ஆன்மீகத் தலைவர் மஹந்த் சுவாமி மஹாராஜ் அவர்களின் முன்னிலையில் இக்கோயிலின் மூர்த்தி பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழாக்கள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளன. பிரான்ஸில் வாழும் இந்திய சமூகத்தினரையும் ஆன்மீக விரும்பிகளையும் ஒன்றிணைக்கும் முக்கிய மையமாக இக்கோயில் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.