மாணவர்களை கண்டித்த பள்ளி முதல்வர்.. 27 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்.. தெலங்கானாவில் அதிர்ச்சி..
ஒரு மாணவர் வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டி பகுதியில் காவலுக்கு நின்ற நிலையில், மற்றொரு மாணவர் வீட்டின் பின்புறச் சுவர் வழியாக ஏறி உள்ளே நுழைந்துள்ளார். சமையலறை வழியாக வீட்டுக்குள் சென்ற அவரை ரூபாரெட்டி பார்த்துள்ளார். இதையடுத்து, மாணவர் தான் கொண்டு வந்த கத்தியால் அவரை தாக்கியுள்ளார். இதில் ரூபாரெட்டி 27 முறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.
ஆகஸ்ட் 20, 2026: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கொண்டமல்லேபள்ளி மண்டலத்தில் பள்ளி முதல்வரை கொலை செய்து ரூ.2.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில், 16 வயதுடைய இரண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பூல்சிங் தண்டா மற்றும் பில்யா தண்டாவைச் சேர்ந்த இருவரும் நண்பர்கள். ரூபாரெட்டி முதல்வராக உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த அவர்கள், அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தனர். இருவரும் சிகரெட், மது உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி வருவதை முதல்வர் ரூபாரெட்டி கண்டித்துள்ளார்.
அவர்களிடம் பணம் மற்றும் செல்போன் சிக்கியதைத் தொடர்ந்து, பெற்றோரை வரவழைத்து எச்சரித்துள்ளார். மேலும், ஒரு மாணவர் விடுதியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். இதனால் முதல்வர் மீது மாணவர்கள் ஆத்திரத்தில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பள்ளி முதல்வரை கொலை செய்ய சதி திட்டம்:
ஆடம்பர வாழ்க்கைக்கு பழகியிருந்த மாணவர்கள், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். பள்ளியில் கட்டணம் வசூலிக்கப்படுவதால், அவரது வீட்டில் அதிகளவில் பணம் இருக்கும் என அவர்கள் நினைத்துள்ளனர்.
மேலும் படிக்க: “விஜய் மாமா” எனது அப்பா இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.. கர்நாடகாவில் சுட்டு கொல்லப்பட்டவரின் மகள் உருக்கமான வீடியோ!
சம்பவத்துக்கு 5 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு, முதல்வரின் வீட்டைச் சுற்றி நோட்டமிட்டுள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் எளிதாக பணம் சம்பாதிப்பது, கொலை செய்வது மற்றும் குற்றம் செய்த பிறகு போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்பது தொடர்பான தகவல்களைத் தேடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
27 முறை கத்தியால் குத்தி கொலை:
கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை இருவரும் முதல்வரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். முன்கூட்டியே வாங்கிய ஹூடி, டி-ஷர்ட், பேன்ட், முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்துகொண்டனர். பின்னர் கத்தியையும் வாங்கியுள்ளனர்.
ஒரு மாணவர் வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டி பகுதியில் காவலுக்கு நின்ற நிலையில், மற்றொரு மாணவர் வீட்டின் பின்புறச் சுவர் வழியாக ஏறி உள்ளே நுழைந்துள்ளார். சமையலறை வழியாக வீட்டுக்குள் சென்ற அவரை ரூபாரெட்டி பார்த்துள்ளார். இதையடுத்து, மாணவர் தான் கொண்டு வந்த கத்தியால் அவரை தாக்கியுள்ளார். இதில் ரூபாரெட்டி 27 முறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.
மேலும் படிக்க: ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்ட ராமர் கோயில் பிரசாதம்.. அமேசான் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்..
பின்னர் படுக்கையறையில் இருந்த சுமார் ரூ.2.50 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். ரூபாரெட்டியின் செல்போனை அணைத்து, வீட்டின் அருகே இருந்த பாறையின் அடியில் வைத்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய ஆடைகளையும் எடுத்துச் சென்று கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளனர்.
மாணவர்கள் சிக்கியது எப்படி?
கொலைக்கு முன்பு ரூபாரெட்டி தனது அத்தையுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அந்த உரையாடலின் இறுதியில் அவர் ‘பாபு’ என்று கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அவரது செல்போன் அணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு தகவலை முக்கிய தடயமாகக் கொண்டு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ‘பாபு’ என அவர் யாரைக் குறிப்பிட்டுப் பேசினார் என்ற கோணத்தில் பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டது.
பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, பள்ளிக்கு வராத 13 மாணவர்கள் குறித்து போலீசார் விசாரித்தனர். அவர்களில் 5 பேர் 10-ம் வகுப்பு மாணவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், இரண்டு மாணவர்கள் திடீரென அதிகளவில் பணத்தைச் செலவழித்து ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த வழக்கை விசாரிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டன. சுமார் 70 சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், 80-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.