14 மாநிலங்களில் அதிரடி வேட்டை… 253 பேர் கைது – ஐ.எஸ்.ஐ. ஆதரவு பயங்கரவாத நெட்வொர்க் சிதைப்பு
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இது பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 மாநிலங்களில் 253 பேர் கைது அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 80-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17, 2026: சுதந்திர தினத்திற்கு முன்பாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் செயல்பட்டதாகக் கூறப்படும் ஷஹ்சாத் பட்டி பயங்கரவாத வலையமைப்பு முறியடிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு திட்டமிட்டிருந்த நாசவேலைகளை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளதாகவும், நாடு முழுவதும் 14 மாநிலங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
14 மாநிலங்களில் மேற்கொள்ள இருந்த பயங்கரவாத நடவடிக்கை முறியடிப்பு:
இதுகுறித்து அமித் ஷா தனது எக்ஸ் தளப் பதிவில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு சுதந்திர தினத்திற்கு முன்பாக ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற ஷஹ்சாத் பட்டி வலையமைப்பை அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் 14 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழுவிடம் இருந்து மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் (IED), பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலை முத்திரையுடன் கூடிய கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் உளவு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் கைப்பற்றப்பட்டதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்தக் குழு பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
253 பேர் கைது:
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இது பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 மாநிலங்களில் 253 பேர் கைது அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 80-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான தாக்குதல் 5 ஆண்டுகளில் 7 மடங்கு உயர்வு.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிர்ச்சி அறிக்கை!!
ஆகஸ்ட் 12ஆம் தேதி, மாநில காவல்துறையினருடன் நிகழ்நேர உளவுத் தகவல் பகிர்வு முறையைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 62 பேர், ஹரியானாவில் 52 பேர், டெல்லியில் 51 பேர், பஞ்சாபில் 44 பேர், ராஜஸ்தானில் 15 பேர், மகாராஷ்டிராவில் 8 பேர், உத்தரகண்டில் 5 பேர், கர்நாடகா, குஜராத் மற்றும் பீகாரில் தலா 3 பேர், தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் கேரளாவில் தலா 2 பேர் என மொத்தம் 253 பேர் பிடிபட்டுள்ளனர்.
பலகட்ட விசாரணை:
இதற்கிடையே, மேற்கு வங்க STF, இந்தியா–வங்கதேச எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பாகிஸ்தான் நாட்டவர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளது. பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தைச் சேர்ந்த ராணா ரவூஃப் என்ற நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: 7 மாதங்களுக்குப் பிறகு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் புதிய அணி.. யார் யாருக்கு என்ன பொறுப்பு?
மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத சந்தேக நபர்களுடன் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் நீண்டகாலமாக தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரும் கர்நாடகாவின் கலபுரகியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.