இனி எவ்வளவு நேரங்கள் வேண்டுமானாலும் விளம்பரங்கள் ஒளிபரப்பலாம் – மத்திய அரசின் புதிய முடிவு
TV Advertising Rules : ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் என்ற விதியை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்புத் துறையில் இப்போது போதுமான போட்டி நிலவுவதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நேயர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும் விளம்பரங்கள் தான். டிவி சேனல்கள் தாண்டி தற்போது யூடியூப் மற்றும் ஓடிடி தளங்களிலும் விளம்பரங்கள் மக்களுக்கு தொல்லையாக மாறி வருகின்றன. இந்த நிலையில் விளம்பரங்கள் மக்களுக்கு மேலும் தொல்லையாக மாறப்போகின்றன. 20 ஆண்டுகளாக தொடர்ந்த விளம்பரங்களுக்கான 12 நிமிட கட்டுப்பாட்டை அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் தொலைகாட்சி சேனல்கள் கூடுதலாக விளம்பரங்களை ஒளிபரப்ப்ப முடியும்.
20 ஆண்டுகால விளம்பரக் கட்டுப்பாடு நீக்கம்
ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் என்ற விதியை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு கடந்த 1994 ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகளின் கீழ் 2006 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த 20 ஆண்டுகளாக தொலைக்காட்சி ஒளிபரப்புத் துறை பெருமளவில் மாறியுள்ளது.
இதையும் படிக்க : சாதாரண ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்.. அதிகரிக்கிறது பொது பெட்டிகளின் எண்ணிக்கை!
கடந்த 2006 ஆம் ஆண்டில் இந்தியாவில் நாட்டில் 62 தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 900க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. கேபிள் தொலைக்காட்சி சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதையும், டிடிஎச், கேபிள் டிவி போன்ற தளங்கள் நேயர்களுக்கான தேர்வுகளை விரிவுபடுத்தியுள்ளதையும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தொலைக்காட்சி ஒளிபரப்புத் துறையில் இப்போது போதுமான போட்டி நிலவுவதாகவும், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் நுகர்வோருக்கு நூற்றுக்கணக்கான சேனல்கள் கிடைப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கட்டணத் தொலைக்காட்சியாக இருந்தாலும் சரி அல்லது இலவச ஒளிபரப்புச் சேவையாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி சேனல்கள் விளம்பரங்களையே பெரிதும் நம்பியுள்ளன.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, விளம்பர கால அளவுக்கான இத்தகைய கட்டுப்பாடு டிஜிட்டல் ஊடகங்களுக்கு இல்லாத நிலையில், பாரம்பரிய தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு இடையே சமமற்ற சூழலை இந்த 12 நிமிட வரம்பு உருவாக்கியிருந்தது. எனவே, வணிகம் செய்வதை எளிதாக்கவும், ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கவும் அந்தப் பழைய விதியை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 12 நிமிட வரம்பை நீக்குவதற்கான இந்த முடிவு, அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.’
இதையும் படிக்க : UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..
விளம்பர கால அளவுக்கான இத்தகைய கட்டுப்பாடு டிஜிட்டல் ஊடகங்களுக்கு இல்லாத நிலையில், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு இடையே சமமற்ற சூழலை இந்த 12 நிமிட வரம்பு உருவாக்கியிருந்தது. எனவே, வணிக நோக்கத்திற்காகவும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கவும் அந்தப் பழைய விதியை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



