இஎம்ஐ செலுத்தத் தவறினால் வங்கி உங்கள் வீட்டை ஜப்தி செய்ய முடியுமா? உண்மை என்ன?
Loan Recovery Rules : வீட்டுக் கடன், வாகனக் கடன், தங்கக் கடன் அல்லது சொத்து மீதான கடன் வாங்கியவர்களுக்கு, கடன் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், உங்களது பொருட்களை கையகப்படுத்த வங்கிகளுக்கு உரிமை உள்ளதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏதேனும் ஒரு காரணத்தினால் உங்களால் கடனுக்கான மாதத் தவணையை செலுத்த முடியாவிட்டால், வங்கிகள் உங்கள் எஸ்எம்எஸ், இமெயில் அனுப்பலாம், அபராதம் விதிக்கலாம் மற்றும் கடன் வசூல் நடவடிக்கைகளைத் தொடங்கலாம். இருப்பினும், ஒரே ஒரு மாதத் தவணையை தவறவிடுவது மட்டும் உங்கள் சொத்துக்களை ஜப்தி செய்வதற்கான உரிமையை வங்கிக்கு அளித்துவிடாது. மிக முக்கியமாக, கடனை வசூலிக்கும் முயற்சியில் லோன் ஏஜெண்ட் உங்கள் குடும்பத்தினரை மிரட்டவோ, தகாத வார்த்தைகளால் திட்டவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என விதிமுறை சொல்கிறது.
வங்கி எப்போது உங்கள் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்?
வீட்டுக் கடன், வாகனக் கடன், தங்கக் கடன் அல்லது சொத்து மீதான கடன் வாங்கியவர்களுக்கு, கடன் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், அதற்கான பிணையமாக உள்ள சொத்து மீது வங்கி சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கலாம். இருப்பினும், இதற்கென வரையறுக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். சர்ஃபாசி சட்டத்தின் படி ஒரு பிணையம் கொண்ட கடன் செயலற்ற சொத்துஎன வகைப்படுத்தப்பட்ட பிறகு, நிலுவைத் தொகையை 60 நாட்களுக்குள் செலுத்துமாறு வங்கி எழுத்துப்பூர்வமான அறிவிப்பை அனுப்பலாம்.
இதையும் படிக்க : பிஎம் ஸ்வநிதி திட்டம் – சிறு வியாபாரிகளுக்கு ரூ.90,000 கடன் – எப்படி பெறுவது?
கடன் வாங்கியவர் இந்த அறிவிப்புக்கு ஆட்சேபனை அல்லது பதிலைச் சமர்ப்பித்தால், வங்கி அதைப் பரிசீலித்து, ஆட்சேபனையை நிராகரிப்பதற்கான காரணங்களை 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். எனவே, ஒரு தவணையைத் தவறவிடுவது என்பது வங்கி உடனடியாக உங்கள் வீட்டையோ அல்லது வாகனத்தையோ ஜப்தி செய்யும் என்று அர்த்தமல்ல.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, கடனை வசூலிக்கும்போது வங்கிகளும் அவற்றின் லோன் ஏஜென்ட்களும் மிரட்டல் அல்லது துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கடன் வாங்கியவரைப் பொதுவெளியில் அவமானப்படுத்துவது அல்லது அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிறரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது ஆகியவை அடங்கும்.
இதையும் படிக்க : ஹைபிரிட் லோன் என்றால் என்ன?.. கடன் வாங்குவதற்கு முன்பு இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!
வங்கி உங்களைத் துன்புறுத்தினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒரு லோன் ஏஜெண்ட் உங்களைத் துன்புறுத்தினால், அழைப்புப் பதிவுகள், வாட்ஸ்அப் செய்திகள், குரல் அஞ்சல்கள் மற்றும் பிற பதிவுகள் போன்ற ஆதாரங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும். முதலில், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது கடன் வழங்கும் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அமைப்பில் புகார் அளிக்கப்பட வேண்டும். அங்கு பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், இந்த விஷயத்தை ரிசர்வ் வங்கியின் குறைதீர்ப்பு அமைப்புக்குக் கொண்டு செல்லலாம். கடுமையான அச்சுறுத்தல்கள், வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைதல் அல்லது உடல்ரீதியான வன்முறை போன்ற நிகழ்வுகளில், காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம்.



