ஹைபிரிட் லோன் என்றால் என்ன?.. கடன் வாங்குவதற்கு முன்பு இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!
What Is Hybrid Loan | வீட்டு கடன், வாகன கடன் என வாங்கி பெரும்பாலான மக்கள் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். இந்த நிலையில், ஹைபிரிட் லோன் என்றால் என்ன, அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் தங்களது சொந்த வீடு கனவை வங்கி கடன் மூலமே நிறைவேற்றிக்கொள்கின்றனர். இவ்வாறு வங்கி கடன் வாங்க நினைக்கும் நபர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய குழப்பம் ஒன்று உள்ளது. அதுதான் நிலையான வட்டியில் (Fixed Rate) வீட்டு கடன் வாங்குவதா அல்லது ஃப்ளோடிங் ரேட் (Floating Rate) எனப்படும் மாறிக்கொண்டே இருக்கும் வட்டி முறையில் வீட்டு கடன் வாங்குவதா என்பதுதான். இந்த சூழலில், பொதுமக்களின் குழப்பத்தை போக்கி அவர்கள் தெளிவான முடிவை எடுக்க உதவுவதுதான் ஹைபிரிட் ஹோம் லோன் (Hybrid Home Loan) முறை. இந்த முறை குறித்து பலருக்கும் தெரியாமல் இருக்கும்.
இந்த நிலையில், ஹைபிரிட் ஹோம் லோன் என்றால் என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஹைபிரிட் ஹோம் லோன் என்றால் என்ன?
ஹைபிரிட் ஹோம் லோன் என்பது நிலையான வட்டி, ஃப்ளோடிங் வட்டி இவை இரண்டையும் சேர்த்து வழங்கும் அம்சமாகும். இந்த அம்சத்தை பயன்படுத்தி வீட்டு கடன் வாங்கும் நபர்கள், ஒரே நேரத்தில் இரண்டு பலன்களையும் பெற முடியும். அதாவது, சந்தையின் நிலவரத்தை பொருத்து கடனின் ஒரு பகுதியை நிலையான வட்டி கொண்டதாகவும், மற்றொரு பகுதியை ஃப்ளோடிங் வட்டி முறை கொண்டதாகவும் மாற்றம் செய்துக்கொள்ளலாம் என்பதுதான் இதன் சிறப்பு அம்சம்.
இதையும் படிங்க : இதை செய்யவில்லை என்றால் ஆக.16 முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது.. மானியமும் கிடைக்காது!
இந்த கடன் எப்படி செயல்படும்?
ஹைபிரிட் முறையில் நீங்கள் வீட்டு கடன் பெற்றால், நீங்கள் அதற்கு ஏற்ப வங்கிகளிடம் பேசி முடிவை எடுக்கலாம். உதாரணமாக நீங்கள் 5 ஆண்டுகள் திருப்பி செலுத்தும் கால அளவீட்டில் கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதில் முதல் 3 ஆண்டுகள் நீங்கள் நிலையான வட்டியை தேர்வு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, உங்களது வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாது.
இதையும் படிங்க : Gold Price : தங்கம் விலை ரூ.1.30 லட்சத்தை தாண்டும்.. பீட்டர் ஷிப் கணிப்பு!
மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு நீங்கள் ஃப்ளோடிங் வட்டியை தேர்வு செய்யும் பட்சத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை மாற்றம் செய்யும்போதெல்லாம் உங்களது கடனுக்கான வட்டியில் மாற்றம் ஏற்பட்டு மாத தவணையில் பிரதிபலிக்கும்.
இவ்வாறு நிலையான வட்டி மற்றும் ஃப்ளோடிங் வட்டி என இரண்டு பலன்களையுமே பெறுவது தான் ஹைபிரிட் ஹோம் லோன் என்பது குறிப்பிடத்தக்கது.