2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு.. கேட்கப்படும் 40 கேள்விகள் என்னென்ன?.. புதிய பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு!!
Census 2027 Questions: 2027-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக 40 கேள்விகள் அடங்கிய பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதி குறித்த கேள்வியும், ஆதார், டிஜிட்டல் கல்வி அறிவு மற்றும் கோவிட் தடுப்பூசி விவரங்களும் இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் நிலுவையில் இருந்த 2027-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, இரண்டாம் கட்ட கணக்கெடுப்புப் பணிகளின் போது பொதுமக்களிடம் கேட்கப்பட உள்ள 40 கேள்விகள் அடங்கிய புதிய வழிகாட்டுதல் பட்டியலை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி குறித்த கேள்வி சேர்க்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: இனி எவ்வளவு நேரங்கள் வேண்டுமானாலும் விளம்பரங்கள் ஒளிபரப்பலாம் – மத்திய அரசின் புதிய முடிவு
இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு மற்றும் கால அட்டவணை:
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணிகள் லடாக், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் உடனடியாகத் தொடங்குகின்றன. இதில் சுயவிவர பதிவு நடைமுறைகள் இம்மாத இறுதி வரை (ஆகஸ்ட் 31) நீடிக்கும். அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 1 முதல் 30-ஆம் தேதி வரை கணக்கெடுப்பு அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்கே சென்று விவரங்களைச் சேகரிக்க உள்ளனர். நாட்டின் ஏனைய மாநிலங்களைப் பொறுத்தவரை, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 13 முக்கியக் கேள்விகள்:
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்தம் 29 கேள்விகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஆனால், இம்முறை நவீன கால மாற்றங்களுக்கும் அரசுச் நலத்திட்டத் தேவைகளுக்கும் ஏற்ப புதிதாக 13 கேள்விகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 40 கேள்விகளாக உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, பட்டியல் சமூகங்கள் குறித்த விவரங்கள் மட்டுமின்றி, சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒருவரின் ‘சாதி என்ன?’ என்ற கேள்வியும் நேரடியாகக் கேட்கப்பட உள்ளது. மேலும் கணவன் அல்லது மனைவியின் பெயர், தேசிய இனம், தாய்-தந்தை விவரங்கள், டிஜிட்டல் கல்வி அறிவு, நிரந்தர முகவரி மற்றும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட இடம் போன்ற விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள் சேகரிப்பு:
இது தவிர, தனிநபர்களின் அடையாள மற்றும் நிதிச் சார்ந்த விவரங்களைச் சரிபார்க்கும் வகையில் வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்போர்ட் எண், ஓட்டுநர் உரிமம், செல்போன் எண், ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான விவரங்கள் இருந்தால் அவை குறித்தும் இக்கணக்கெடுப்பின் போது தகவல்கள் கேட்கப்பட உள்ளன. டிஜிட்டல் முறையில் விரைவாகத் தரவுகளைப் பதிவேற்றும் வகையில் இந்த 40 கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. என்னென்ன கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பது குறித்து அறியலாம்.
தனிநபர் மற்றும் குடும்ப அடிப்படை விவரங்கள்:
நபரின் பெயர், குடும்பத் தலைவருடனான உறவு, பாலினம், பிறந்த தேதி மற்றும் வயது, தற்போதைய திருமண நிலை, திருமணம் நடந்தபோது வயது, கணவன் அல்லது மனைவியின் பெயர், தேசிய இனம், மதம், பட்டியல் இனம் (SC) / பட்டியல் பழங்குடி (ST) / சாதி விவரம், தந்தை பற்றிய விவரங்கள், தாய் பற்றிய விவரங்கள், மாற்றுத்திறனாளி.
மொழி மற்றும் கல்வித் தகுதி:
தாய்மொழி மற்றும் தெரிந்த பிற மொழிகள், கல்வி அறிவு மற்றும் டிஜிட்டல் கல்வி அறிவு நிலை, கல்வி நிறுவனத்திற்குச் செல்லும் நிலை, பெற்ற உயர்கல்வி மற்றும் படித்த துறை/பாடப்பிரிவு.
தொழில் மற்றும் பொருளாதார நிலை:
கடந்த ஆண்டில் ஏதேனும் பணி செய்தாரா?, பொருளாதார நடவடிக்கையின் பிரிவு, பார்க்கும் தொழில்/வேலை, நிறுவனம், வர்த்தகம் அல்லது சேவையின் தன்மை, பணியாளரின் வகை, பொருளாதாரம் சாராத பிற நடவடிக்கை, வேலை தேடுகிறாரா / கிடைக்கக் கூடிய சூழலில் உள்ளாரா?, வேலை செய்யும் இடத்திற்குச் செல்லும் பயணம்.
இடம்பெயர்வு மற்றும் குடியிருப்பு விவரங்கள்:
பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், இடம்பெயர்ந்ததற்கான காரணம், தற்போது வசிக்கும் கிராமம்/நகரத்தில் தங்கியிருக்கும் காலம், நிரந்தர வீட்டு முகவரி.
வளர்ப்பு மற்றும் மகப்பேறு விவரங்கள்:
இந்த கேள்விகளானது பெண்களுக்கு மட்டும், தற்போது உயிருடன் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, இதுவரை உயிருடன் பிறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த ஓராண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை.
இதையும் படிக்க : சாதாரண ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்.. அதிகரிக்கிறது பொது பெட்டிகளின் எண்ணிக்கை!
டிஜிட்டல் சான்றுகள், வங்கி மற்றும் தடுப்பூசி விவரங்கள்:
கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட இடம், பயன்பாட்டில் உள்ள மொத்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, மொபைல் எண், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், பாஸ்போர்ட் எண், ஓட்டுநர் உரிமம் உள்ளதா? ஆகிய கேள்விகள் இடம்பெற்றுள்ளன.