AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தமிழ்நாட்டில் பால் உற்பத்தி திடீர் சரிவு!”.. தட்டுப்பாடு உருவாகும் அபாயம்?.. முழு விவரம்!!

Tamil Nadu Milk Shortage: தமிழகத்தில் கோடைக் காலம் முடிந்தும் நிலவும் கடும் வறட்சி மற்றும் மாட்டுத் தீவனங்களின் கடுமையான விலை உயர்வு காரணமாகப் பால் உற்பத்தி 20% வரை சரிந்துள்ளது. இதனால் ஆவின் தினசரி பால் கொள்முதல் 32 லட்சம் லிட்டரிலிருந்து 28 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளதால் பால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

“தமிழ்நாட்டில் பால் உற்பத்தி திடீர் சரிவு!”.. தட்டுப்பாடு உருவாகும் அபாயம்?.. முழு விவரம்!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 Aug 2026 09:53 AM IST

தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிந்த பின்னரும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மாநிலத்தில் நிலவும் தீவிர வறட்சி காரணமாகக் கால்நடைகளுக்கான பசுந்தீவனங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறம், மக்காச்சோளம், தவிடு, பருத்திக்கொட்டை உள்ளிட்ட அடர் தீவனங்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளதால் பால் உற்பத்தி செய்வதற்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாகப் பால் உற்பத்தியில் எந்தவித லாபமும் கிடைக்காமல் விவசாயிகளும் பால் உற்பத்தியாளர்களும் பெரும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: “உதவி செஞ்ச பிறகுதான் உள்ள மம்மூட்டி சார் இருக்குறதே தெரிஞ்சிது!”.. மதுரை நெடுஞ்சாலையில் நள்ளிரவு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தீவன விலை உயர்வு மற்றும் உற்பத்தி வீழ்ச்சி:

குறிப்பாக ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகள் வறண்டு, விளைநிலங்கள் பாறைகளாக
மாறியுள்ளதால் பசுந்தீவனங்கள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இதனால் வழக்கமான பால் உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. நெல் அறுவடை காலத்தில் ஒரு மூட்டை ரூ.450-க்கு விற்கப்பட்ட நிலத்தவிடு தற்போது ₹850 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, தவிடு மூட்டை ரூ.750-லிருந்து ரூ.930 வரையிலும், சோயா விலை உயர்வால் மாட்டுத் தீவன மூட்டைக்கு ரூ.400 முதல் ரூ.450 வரை உயர்ந்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். வரத்து தட்டுப்பாடு மற்றும் வறட்சி காரணமாகப் பாலை உற்பத்தி செய்து கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஊற்றும்போது கிடைக்கும் தொகை, உற்பத்தி செலவுக்கே சரியாக இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புலம்புகின்றனர்.

ஆவின் கொள்முதல் சரிவு:

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அளித்த தகவலின்படி, தமிழகத்தில் நிலவும் தீவிர வறட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் போட்டி காரணமாக, ஆவின் நிர்வாகம் வழக்கமாக நாளொன்றுக்குச் செய்து வந்த 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் தற்போது 28 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது. மேலும் கால்நடை பராமரிப்பு, டீசல் விலை உயர்வு, போக்குவரத்து மற்றும் பால் பேக்கேஜிங் செலவுகள் சுமார் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், அரசு உடனடியாகப் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும், மாடு வளர்ப்பதற்கான மானிய உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு ஆவின் நிர்வாகத்தில் நிலவும் முறைகேடுகளைத் தடுக்க ஊழல் அதிகாரிகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க : “லஞ்சமும் ஊழலுமற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதும் விடுதலைக்குச் சமமே!”.. சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு!

விவசாயிகளின் எதிர்கால அச்சம்:

பால் உற்பத்தித் தொழில் என்பது கிராமப்புறப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான தூணாக விளங்கி வருகிறது. விவசாயம் பொய்க்கும் காலங்களில் கிராமப்புற மக்களுக்குக் கைகொடுக்கும் இந்தக் பால் பண்ணைத் தொழில், தற்போதைய தீவன விலை உயர்வினாலும் வறட்சியினாலும் பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு உடனடியாகத் தலையிட்டு ஆவின் மூலம் பசுந்தீவன மானியங்களை வழங்காவிட்டாலும், பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தராவிட்டாலும் பல சிறு பால் உற்பத்தியாளர்கள் இத்தொழிலைக் கைவிடும் ஆபத்தான நிலை உருவாகும் எனக் கிராமப்புறப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Follow Us