வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான தாக்குதல் 5 ஆண்டுகளில் 7 மடங்கு உயர்வு.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிர்ச்சி அறிக்கை!!
Attacks on Indians Abroad Increased: கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட இனவெறி மற்றும் வெறுப்புத் தாக்குதல்கள் 7 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2021-இல் 15-ஆக இருந்த தாக்குதல் சம்பவங்கள் 2025-இல் 104-ஆக உயர்ந்துள்ளது.
உயர் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நிமித்தமாக லட்சக்கணக்கான இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வசதித்து வருகின்றனர். இந்த நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மீது நடத்தப்படும் இனவெறித் தாக்குதல்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு.. கேட்கப்படும் 40 கேள்விகள் என்னென்ன?.. புதிய பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு!!
7 மடங்கு உயர்ந்த தாக்குதல்கள்:
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021 முதல் 2025 வரை) உலகம் முழுவதும் 36 நாடுகளில் இந்தியர்களுக்கு எதிராக மொத்தம் 302 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் குறிப்பாக 2021-ஆம் ஆண்டில் 15-ஆக இருந்த தாக்குதல்களின் எண்ணிக்கை, 2022-இல் 31-ஆகவும், 2023-இல் 67-ஆகவும், 2024-இல் 85-ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 104-ஆக அதிகரித்து, கடந்த 5 ஆண்டுகளில் தாக்குதல் சம்பவங்கள் கிட்டத்தட்ட 7 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவரம்:
இந்தியர்கள் மீது அதிக அளவில் தாக்குதல் நடந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவில் மட்டும் இந்தியர்களுக்கு எதிராக 33 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 32 சம்பவங்களும், இங்கிலாந்தில் 31 சம்பவங்களும், கனடாவில் 30 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதேபோல அயர்லாந்து நாட்டிலும் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அயர்லாந்தில் 2021 மற்றும் 2022-இல் தலா ஒரு சம்பவம் மட்டுமே பதிவான நிலையில், 2023-இல் 5-ஆகவும், 2024-இல் 7-ஆகவும், 2025-இல் 10-ஆகவும் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை:
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பே இந்திய அரசின் மிக முக்கிய முன்னுரிமை என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் மூலம் இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏதேனும் தாக்குதல்கள் அல்லது அசம்பாவிதங்கள் நிகழும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகள் மற்றும் காவல் அதிகாரிகளுடன் தூதரக அதிகாரிகள் உடனடியாகத் தொடர்புகொண்டு உரிய விசாரணை நடத்தவும் குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருவதாக மத்திய அரசு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிக்க: இனி எவ்வளவு நேரங்கள் வேண்டுமானாலும் விளம்பரங்கள் ஒளிபரப்பலாம் – மத்திய அரசின் புதிய முடிவு
இந்தியர்களின் பாதுகாப்பும் அதிகரித்து வரும் சவால்களும்:
இந்தியாவில் இருந்து மேற்படிப்புக்காகவும் தொழில் வாய்ப்புகளுக்காகவும் வெளிநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், பல்வேறு மேற்கத்திய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான உள்ளூர் அரசியல் காரணங்களால் இந்தியர்கள் இலக்காக்கப்படுவது அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியர்களின் பங்களிப்பு உலகப் பொருளாதாரத்திற்கு ஆதரவாக இருக்கும்போதிலும், அவர்களின் தனிநபர் பாதுகாப்பை வெளிநாடுகளில் உறுதிசெய்வது மத்திய அரசுக்கு தற்போதைய சூழலில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.