வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், சுதந்திர தின வார இறுதியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. வெளியான இரண்டு நாட்களிலேயே உலகளவில் 100 கோடிக்கும் மேல் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் அறிவித்தது. வர்த்தக இணையதளமான Sacnilk தகவலின்படி, படம் இதுவரை இந்தியாவில் 58.15 கோடி நிகர வசூலும், உலகளவில் 110.22 கோடி மொத்த வசூலும் ஈட்டியுள்ளது. இதன்மூலம் சூர்யா நடித்த படங்களில் வேகமாக 100 கோடியை கடந்த திரைப்படம் என்ற சாதனையை ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பெற்றுள்ளது. சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் மூன்று நாட்களில் இந்தியாவில் 68 கோடி நிகர வசூலும், உலகளவில் 121.75 கோடியும் வசூலித்திருந்தது. அதேநேரம், ‘ரெட்ரோ’ திரைப்படம் மூன்று நாட்களில் 59.21 கோடி உலகளாவிய வசூல் செய்திருந்த நிலையில், அதன் வசூலை ‘விஸ்வநாத் & சன்ஸ்’ முறியடித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் தமிழில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. வயது வித்தியாச காதல், குழந்தைப் பருவ மன உளைச்சல் உள்ளிட்ட விவகாரங்களை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.