2 நாளாக பூட்டியிருந்த வீடு.. வெளியேறிய கடும் துர்நாற்றம்.. திருவேற்காட்டில் நகைக்காக அரங்கேறிய கொடூர கொலை!
Thiruverkadu Sanitation Worker Murder : திருவேற்காடு பகுதியில் 8 பவுன் தங்க நகைக்காக பெண் தூய்மை பணியாளர் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை திருவேற்காடு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ஹேமாவதி ( 45 வயது). இவர், பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் உடல்நல குறைவால் உயிரிழந்த நிலையில், ஹேமாவதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக அவரது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. மேலும், அவரது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருவேற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, ஹேமாவதி வீட்டின் படுக்கை அறையில் சடலமாக கிடந்தார். மேலும், அவரது முகம் தலையணையால் அமுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.
8 பவுன் நகைக்காக பெண் கொடூர கொலை
இதனால், அவர் தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டது போலீசாருக்கு தெரிய வந்தது. மேலும், அவர் அணிந்திருந்த சுமார் 8 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தன. இதனால், அவர் நகைக்காக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: வாழப்பாடி அரசு விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. 4 பணியாளர்கள் சஸ்பெண்ட்.. இருவர் கைது!




கண்காணிப்பு கேமராவில் சிக்கிய இளைஞர்
மேலும், இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், ஹேமாவதி வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் பதிவாகி இருந்த நித்திஷ் என்ற இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவரும், அவரது நண்பருமான ஆகாஷ் என்பவரும் சேர்ந்து ஹேமாவதி கழுத்தில் அணிந்திருந்த நகையை திருட திட்டமிட்டனர்.
ஒருவர் சிறையில் அடைப்பு- மற்றொருவருக்கு வலைவீச்சு
அதன்படி, அவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அவர்கள் திடீரென வீட்டுக்குள் நுழைந்து தலையணையால் ஹேமாவதியை அமுக்கி கொலை செய்துவிட்டு, அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றதை ஒத்துக் கொண்டனர். தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகையை பறிமுதல் செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆகாசை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: சென்னையில் தங்கை முறை பெண்ணுடன் கள்ளக்காதல்.. கண்டித்தும் கேட்காததால் கொலை.. 3 பேர் அதிரடி கைது!