மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு.. அடுத்தடுத்து கைதாகும் அதிகாரிகள்.. முன்னாள் சார் பதிவாளருக்கு காப்பு!
Meenakshi Amman Temple Land Irregularity Case : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ. 60 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலமாக முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் சார் பதிவாளரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர் கோவில் சேவைக்காக ரூ.60 கோடி மதிப்பிலான கோயில் அறக்கட்டளை நிலம் உள்ளது. இந்த நிலத்தை, முறைகேடாக பட்டா மாற்றம் செய்து, போலி ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முன்னாள் சார் பதிவாளர் அனந்தராமன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை, தல்லாகுளம் பகுதியில் உள்ள கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் வரையிலான இந்த நிலத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ யாருக்கும் உரிமை இல்லை என்று உயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் மாற்றி தனிநபர் பெயரில் பட்டா பெறப்பட்டது.
19 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக கோவில் இணை ஆணையர் செல்லதுரை அளித்த புகாரில், அரசு அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், சார்பதிவாளர் மற்றும் நிலத்துடன் தொடர்புடையவர்கள் என மொத்தம் 19 பேர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், முறப்பநாடு முன்னாள் சார் பதிவாளர் வந்தராமன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன், பிரசாந்த், பிரகாஷ், சந்தன கருப்பன் உள்ளிட்ட அதிகாரிகள், அனீஸ், ராஜ்குமார், இளையராஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க: கார் விவகாரத்தில் உதயநிதி – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே கடும் வாக்குவாதம்..




அடுத்தடுத்து கைதான அரசு அதிகாரிகள்
இது தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டபோது, புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜாவும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, மதுரை வடக்கு தாசில்தாராக பணிபுரிந்த அன்பழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கோயிலின் உரிமையை வருவாய் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டு, ராமாயி ஆயியார் உள்ளிட்டோருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது அன்பழகனுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
6- ஆவதாக கைதான முன்னாள் சார்- பதிவாளர்
தொடர்ந்து, அவர் துணை ஆட்சியர் பதவியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை பகுதியில் சேர்ந்த காளிகுமார் கைதான நிலையில், அவர் கோயில் நிலம் தொடர்பான முறைகேடு படமான பத்திர பதிவில் தொடர்பு இருப்பதாக போலீசார் குற்றம் சாட்டினர். தொடர்ந்து, கோயில் நில வருவாய் ஆவணங்கள், பட்டா மாற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய முன்னாள் விஏஓ அரசன் கைது செய்யப்பட்டார். இதுவரை 5 பேர் கைதான நிலையில், தற்போது முன்னாள் சார் பதிவாளர் அனந்தராமன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்ப டிக்க: “தப்பா இருந்தா எங்க மேல கேஸ் போடுங்க!”.. சட்டமன்றத்தில் சவால் விட்ட கே.என்.நேரு!!