அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயர் கைவிட்டது சரிதான்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
AIADMK MLAs Disqualification: அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை சட்டப் பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் கைவிட்டது சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மை நிரூபித்த போது, அதிமுக கொறடா உத்தரவை மீறி அந்த கட்சியை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதில், 21 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவதாக சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் கைவிட்டது சரிதான். சட்டத்தின் அடிப்படையில் எம்எல்ஏக்களை மன்னித்து 15 நாட்களுக்குள் கடிதம் அளித்து விட்டதால் தகுதி நீக்கம் என்ற கேள்வி எழாது என்று தெரிவித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்கள்
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு 107 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலை இருந்தது. அப்போது, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையில் சுமார் 25 எம்எல்ஏக்கள் அதிமுக கொறடா அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழக அரசு கொண்டு வந்த பெரும்பான்மை நிரூபிப்பதற்கான நம்பிக்கை தீர்மானத்தில் ஆதரவாக வாக்களித்தனர்.
மேலும் படிக்க: வாரவிடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா?அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!




21 எம்எல்ஏக்கள் மன்னிப்பு கடிதம் அளிப்பு
அந்த 25 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகரிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புகார் மனு அளித்தனர். இதில், மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து பேரவை தலைவரிடம் கடிதம் அளித்தனர். இதனால், மீதமுள்ள 21 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது தவறை உணர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கடிதம் அளித்தனர்.
தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்ட சபாநாயகர்
இதனால், அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும், இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பேரவை தலைவரிடம் எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்தார். இதனை ஏற்ற சபாநாயகர் 21 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவதாக அறிவித்திருந்தார். இந்த உத்தரவை தான் உயர் நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: விவசாயிகள் கவனத்துக்கு… தனித்துவ அடையாள எண் கண்டிப்பாக பெற வேண்டும்.. வேளாண் அதிகாரி சேதுராமன் அறிவுறுத்தல்!