“கடன் வாங்கி MLAக்களுக்கு காரா?.. 190 MLAக்களிடம் சொந்த கார் இருக்கு!”.. சீமான் கடும் எதிர்ப்பு!!
Seeman Opposes TN Govt Decision: தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 190 எம்.எல்.ஏ-க்களிடம் ஏற்கனவே சொந்தமாக கார் இருக்கும் நிலையில், மக்கள் வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் வீணடிப்பதா என அரசுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 20: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்த செய்தி பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு மக்கள் நலத் திட்டங்களும், பொருளாதார நெருக்கடிகளும் நிலுவையில் உள்ள சூழலில், அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தென்மாநில முதல்வர்கள் மாநாடு.. மேகதாது அணையை விட்டுக் கொடுக்காத கர்நாடகா.. தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?
190 MLAக்களிடம் சொந்தமாக கார் இருக்கு:
அரசின் இந்த முடிவைக் கண்டித்துப் பேசிய சீமான், தேர்தலில் போட்டியிட்ட போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு மற்றும் பிரமாணப் பத்திரங்களின்படி, தற்போதைய 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 190 பேரிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்துகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். கார் இல்லாத உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்கினால் கூட அதில் ஏதேனும் ஒரு நியாயம் உண்டு எனக் குறிப்பிடலாம், ஆனால் சொந்தமாக சொகுசு வாகனங்களை வைத்துள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நிதியமைச்சர் மரியவில்சன் போன்ற பெரும் பணக்காரர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து புதிய கார்களை வாங்கிக் கொடுப்பது எந்த விதத்தில் நியாயமாகும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
MLAக்களுக்கு மறைமுக கையூட்டா இது?
மேலும், “அரசை விமர்சிக்காமல் இருக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மறைமுக கையூட்டா இது? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப் பணம் இல்லை என்றீர்கள், இதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது?” என்றும் சீமான் சாடினார். “உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ அல்லது உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள்; மக்கள் பணத்தை வீணடிக்காதீர்கள்” என்று சாடினார்.
ஏழை எளிய மக்களின் நலனுக்கு எதிரானது:
ஒரு புதிய மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை இருக்கும் நிலையில், அனைத்து உறுப்பினர்களுக்கும் கார் வாங்க தோராயமாக ரூ.70 கோடி வரை நிதி தேவைப்படும். அதுமட்டுமின்றி, 234 உறுப்பினர்களுக்கும் மாதம் ரூ.1 லட்சம் வீதம் எரிபொருள் மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவுகளுக்காக ஆண்டிற்குச் சுமார் ரூ.28 கோடி வரை அரசுக் கருவூலத்தில் இருந்து செலவிடப்பட உள்ளது. ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் போக்குவரத்துப் படி உள்ளிட்ட கணிசமான ஊதியமும் சலுகைகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது ஏழை எளிய மக்களின் நலனுக்கு எதிரானது என்றும் சீமான் சாடியுள்ளார்.
இதையும் படிக்க: “ஆடு, மாடுகளுக்குத் தான் ரேஷன் அரிசி”.. அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கொந்தளித்த திமுக உறுப்பினர்கள்!!
ஆடம்பரத்திற்காக மக்கள் பணம் விரயம்:
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், ஒவ்வொரு மழைக்காலத்திலும் ஆயிரக்கணக்கான மூட்டை நெல்கள் மழையில் நனைந்து வீணாகும் அவலம் தொடர்கிறது. நெல் மூட்டைகளைப் பாதுகாக்கத் தார்ப்பாய் வாங்க ரூ.10 கோடி ஒதுக்குவதற்குக் தயங்கும் அரசு, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆடம்பரப் பயணத்திற்காகக் கோடிக்கணக்கான மக்கள் பணத்தை விரயம் செய்வது மக்களின் தேவைகளை உதாசீனப்படுத்தும் செயல் என சீமான் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.