ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு: 5.50% ஆக அதிகரித்தது ரிசர்வ் வங்கி
RBI Hikes Repo Rate by 25 Bps : இந்திய ரிசர்வ் வங்கி தனது முக்கிய கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் 0.25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 5.25 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அக்டோபர் 7,2026 இன்று காலை அறிவித்தார்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ரெப்போ வட்டி உயர்வு: 5.25 சதவிகிதத்திலிருந்து 5.50 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனது முக்கிய கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் 0.25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 5.25 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த முடிவை எடுத்ததாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அக்டோபர் 7,2026 இன்று காலை அறிவித்தார்.
ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு
ரிசர்வ் வங்கி கடைசியாக 2023 பிப்ரவரியில் ரெப்போ விகிதத்தை 0.25% உயர்த்தி 6.50 சதவீதமாக நிர்ணயித்தது. அதன்பின் 2025 ஆம் ஆண்டில் நான்கு கட்டங்களாக மொத்தம் 1.25 சதவிகிதம் வட்டியைக் குறைத்து, 5.25 சதவீதமாகக் கொண்டு வந்தது. கடந்த நான்கு நிதிக் கொள்கைக் கூட்டங்களிலும் அந்த விகிதம் மாற்றமின்றித் தொடர்ந்தது. இந்நிலையில், சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி உயர்வுப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
இதையும் படிக்க : ஆதார் பெயர் திருத்தம், மாற்றம்.. விதிகளில் முக்கிய மாற்றம் செய்த UIDAI.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!




அதிகரித்து வரும் பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக அளவில் பல முக்கிய மத்திய வங்கிகள் வட்டியை உயர்த்தி வருவது, ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தம் ஆகியவை காரணமாக இந்த முறை வட்டி உயர்வு இருக்கும் என்று பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் ஏற்கெனவே கணித்திருந்தனர். ஒரு சிலர் 0.50% வரை உயர்வு இருக்கலாம் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால், ரிசர்வ் வங்கி 0.25 சதவிகிதம் மட்டுமே உயர்த்தியுள்ளது. 2026 அக்டோபர் 5 முதல் 7 வரை 3 நாட்கள் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு?
ரெப்போ விகிதம் என்பது வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய காலக் கடன் பெறும்போது செலுத்தும் வட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இது உயரும்போது வங்கிகளின் கடன் செலவு அதிகரிக்கிறது. அந்தச் சுமையை வங்கிகள் வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவது வழக்கம். எனவே, மாறும் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் பெற்றவர்களின் மாதத் தவணை வரும் நாட்களில் உயர வாய்ப்புள்ளது. சில வங்கிகள் EMI-யை மாற்றாமல் கடன் காலத்தை நீட்டிக்கவும் செய்யலாம். அதே நேரம், வைப்புத்தொகைக்கு வங்கிகள் வழங்கும் வட்டியும் சற்று உயரக்கூடும் என்பது சற்று ஆறுதலான செய்தியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : பொருளாதாரம் சரிந்தால் பணத்தின் மதிப்பு என்ன ஆகும்? – ராபர்ட் கியோசாகி எச்சரிக்கை
ரிசர்வ் வங்கியின் முடிவை எதிர்நோக்கி புதன்கிழமை காலை பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 446 புள்ளிகள் சரிந்துள்ளது. தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 156 புள்ளிகள் குறைந்து 22,620க்கு இறங்கியது. பொதுத்துறை வங்கி,ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைப் பங்குகள் அதிக சரிவைச் சந்தித்தன. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் 10 காசுகள் சரிந்து ரூ.96.45 ஆக இருந்தது.