சென்னையில் தங்கை முறை பெண்ணுடன் கள்ளக்காதல்.. கண்டித்தும் கேட்காததால் கொலை.. 3 பேர் அதிரடி கைது!
Chennai Crime : சென்னையில் தங்கை உறவு உள்ள பெண்ணிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்த எலக்ட்ரீசியனை அந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட 3 பேர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். இந்தச் சம்பவத்தில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள ஆட்டந்தாங்கல் பகுதியில் உள்ள பாலமுருகன் நகர் 12- ஆவது தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் ( 40 வயது) எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவருக்கு, மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் மகன்களை பிரிந்து ரத்தினவேல் பாண்டியன் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ரத்தினவேல் பாண்டியனுக்கு, அவரது மைத்துனர் சரவணன் என்பவரின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த, சரவணன் பலமுறை ரத்தினவேல் பாண்டியனை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சரவணன், ரத்தினவேல் பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை
அதன்படி, சம்பவத்தன்று செங்குன்றம் அருகே உள்ள எம். எ. நகர் பகுதியில் உள்ள வ. உ. சி. தெருவில் ரத்தினவேல் பாண்டியன் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். இதை அறிந்த, சரவணன் மற்றும் அவரது தம்பி தனசேகர் மற்றும் உறவினர் பழனிசாமி ஆகியோர் அவரை வழி மறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில், அவர்களிடையே அடிதடி ஏற்பட்டது. தொடர்ந்து, சரவணன் தரப்பினர் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ரத்தினவேல் பாண்டியனை சரமாரியாக வெட்டினர்.
மேலும் படிக்க: கோவையில் ஹவுஸ் விசிட் அடித்த காட்டு யானை.. பெரும் பீதியில் தடாகம் பகுதி மக்கள்.. அபாய எச்சரிக்கை!




சம்பவ இடத்தில் காவல் உதவி ஆணையர் விசாரணை
இதில், அவர் பலத்த வெட்டு காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே, அருகில் இருப்பவர்கள் திரண்டு வருவதை பார்த்து, சரவணன் தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதைத் தொடர்ந்து, தகவல் அறிந்த செங்குன்றம் உதவி ஆணையர் பிராங்கிளின் ரூபன், காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்தினவேலை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
3 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்
இதைத் தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரத்தினவேல் பாண்டியன் உறவினர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இதில் தொடர்புடைய சரவணன், பழனிசாமி, தனசேகர் ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: “விஜய் மாமா” எனது அப்பா இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.. கர்நாடகாவில் சுட்டு கொல்லப்பட்டவரின் மகள் உருக்கமான வீடியோ!