AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தப்பா இருந்தா எங்க மேல கேஸ் போடுங்க!”.. சட்டமன்றத்தில் சவால் விட்ட கே.என்.நேரு!!

KN Nehru assembly speech: சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வழங்கும் விவகாரத்தில், திமுக உறுப்பினர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. "தப்பா இருந்தா கேஸ் போடுங்க" என கே.என்.நேரு சவால் விடுத்த நிலையில், கார் என்பது ஆடம்பரம் அல்ல, மக்கள் பணி செய்வதற்கான தேவை என அமைச்சர் பதிலளித்தார்.

“தப்பா இருந்தா எங்க மேல கேஸ் போடுங்க!”.. சட்டமன்றத்தில் சவால் விட்ட கே.என்.நேரு!!
கே.என்.நேரு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 21 Aug 2026 14:07 PM IST

சென்னை, ஆகஸ்ட் 21: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் புதிய கார்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. அரசின் செலவினங்களைக் குறைக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார்கள் தேவையில்லை என எதிர்க்கட்சித் தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அது குறித்துச் சட்டமன்றத்தில் திமுக மூத்த உறுப்பினர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே ஆவேசமான விவாதமும் வார்த்தைப் போரும் நடைபெற்றது.

மேலும் படிக்க: “கடையை திறந்தால் சர்வர் டவுன்!”.. வட்டாட்சியர் அலுவலகத்தில் PoS எந்திரங்களை ஒப்படைத்து ரேஷன் ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

எங்களைக் குதர்க்கமாகப் பேசுகிறார்:

சட்டமன்றத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் அந்தஸ்து உள்ளதால் அவர் அரசு பங்களாவில் தங்கியிருப்பது அவரது சட்டப்பூர்வ உரிமை என்று சுட்டிக்காட்டினார். மேலும், “நாங்கள் அரசுக்குச் செலவைக் குறைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் கார் வேண்டாம் எனக் கூறுகிறோம். ஆனால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நாங்கள் பல கார்கள் வைத்திருப்பதாகக் கூறி எங்களைக் குதர்க்கமாகப் பேசுகிறார்” என்று சாடினார். தேர்தல் வேட்புமனுவில் உள்ள விவரங்கள் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்பட்டதற்குப் பதிலளித்த அவர், “நாங்கள் தவறாகக் குறிப்பிட்டிருந்தால் தைரியம் இருந்தால் எங்கள் மீது வழக்கு போடுங்கள்” என ஆவேசமாகச் சவால் விடுத்தார். அத்துடன், சொந்த வீட்டில் தங்கியிருக்கும் அமைச்சர்களுக்கு அரசு வாடகை வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டி, முடிந்தால் அந்த வாடகையை வேண்டாம் என்று எழுதித் தர முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

கார் என்பது ஆடம்பரம் அல்ல:

இதற்கு உடனடியாகப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அரசின் நிதி சுமையைக் கருத்தில் கொண்டு கார் வேண்டாம் எனக்கூறி, அரசை நிதி மேலாண்மை தெரியாதது போல் சித்தரிக்க முயல்கிறார்” என்று குற்றம்சாட்டினார். மக்கள் பிரதிநிதிகள் ஆயிரக்கணக்கான மக்களை தினமும் சந்திக்க வேண்டிய பொறுப்பில் உள்ளதால் கார் என்பது ஆடம்பரம் அல்ல, அது மக்கள் பணியாற்றுவதற்கான அத்தியாவசியத் தேவை என்று அவர் பலமாக வலியுறுத்தினார்.

வெளிப்படையாக வேட்புமனு பதிவு:

மேலும், தேர்தல் வேட்புமனுத் தாக்கல் குறித்துப் பேசிய அமைச்சர், “எங்களது வேட்புமனுவில் என்ன சொத்து விவரங்கள் உள்ளதோ அதைத்தான் நாங்கள் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளோம். பத்தாயிரம் ரூபாய் மட்டுமே கணக்கில் காட்டிவிட்டு சொகுசு கார்களில் வலம் வரும் வழக்கம் எங்களிடம் இல்லை” என மறைமுகமாகப் பதிலடி கொடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் காலையிலிருந்து ஆளுங்கட்சியை வம்ப இழுக்கும் வகையிலேயே பேசி வருவதாகச் சாடிய அமைச்சர், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் மானியக் கோரிக்கைகள் குறித்துப் பேசுவதை விட்டுவிட்டு அரசியல் காரணங்களுக்காக அவையின் நேரத்தை வீணடிப்பதாகக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: “மின்வாரிய கடன்.. 45 டெண்டர்களில் முறைகேடு!”.. சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி vs நிர்மல் குமார் இடையே கடும் வாக்குவாதம்!!

இந்த காரசாரமான விவாதத்தின் போது இரு தரப்பு உறுப்பினர்களும் எழுந்து நின்று கூச்சலிட்டதால் அவையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் கூச்சல் குழப்பமும் நிலவியது. இதையடுத்து, சட்டப்பேரவையின் கண்ணியத்தைக் காக்கும் வகையில், விவாதத்தின் போது பயன்படுத்தப்பட்ட சில தர்மசங்கடமான மற்றும் அவைக்கு ஒவ்வாத வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாகப் பேரவைத் தலைவர் அறிவித்து விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

Follow Us