“கடையை திறந்தால் சர்வர் டவுன்!”.. வட்டாட்சியர் அலுவலகத்தில் PoS எந்திரங்களை ஒப்படைத்து ரேஷன் ஊழியர்கள் அதிரடி போராட்டம்!
TN Ration Shop Server Issue: ரேஷன் கடைகளில் தொடரும் சர்வர் கோளாறு மற்றும் இணையதளச் சேவை பாதிப்பு காரணமாக, பொதுமக்கள்-ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இப் பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் PoS விற்பனை முனைய எந்திரங்களை ஒப்படைத்து நியாயவிலைக் கடை பணியாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இணையதளச் சேவை மற்றும் சர்வர் கோளாறுகள் தொடர்ச்சியாக நீடித்து வருகின்றன. இதனால், அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெற நியாயவிலைக் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய தொழில்நுட்பக் கோளாறுகளால் பொதுமக்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு இடையே தினமும் வாக்குவாதங்களும் மோதல் போக்கும் உருவாகி வருகின்றன. இப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணக் கோரி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் சார்பாக மாநிலம் தழுவிய அளவில் ‘விற்பனை முனைய எந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டம்’ தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: “மின்வாரிய கடன்.. 45 டெண்டர்களில் முறைகேடு!”.. சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி vs நிர்மல் குமார் இடையே கடும் வாக்குவாதம்!!
எந்திரங்களில் சுற்றிக்கொண்டே இருக்கும் சர்வர்:
நியாயவிலைக் கடைகளில் தினமும் காலை கடை திறக்கப்பட்டது முதல் 11 மணி வரையில் மட்டுமே PoS எந்திரங்கள் ஓரளவிற்குச் செயல்படுகின்றன. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையிலான முதன்மை நேரத்தில், எந்திரங்களில் உள்ள சர்வர் சுற்றிக்கொண்டே இருப்பதால் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க முடியாமல் பணிகள் ஸ்தம்பிக்கின்றன. இதனால், பொருட்களுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் ஆத்திரமடைந்து, கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலைமை ஏற்படுகிறது. இது தொடர்பாக நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் தரப்பில் பலமுறை மாநில சங்கத்தின் மூலம் அரசுக்குக் கோரிக்கைகள் வைக்கப்பட்டும், இதுவரை எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டம்:
இப் பிரச்சினைக்கு உடனடி நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் (தாலுகா அலுவலகம்) PoS விற்பனை முனைய எந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டத்தை ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர். திருச்சியில் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில், சர்வர் பிரச்சினையை உடனே சரிசெய்து தருவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து தற்காலிகமாகப் போராட்டம் கைவிடப்பட்டாலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் தரமான இணையதளச் சேவை கிடைக்க தனி மோடம் (Modem) சாதனங்களை வழங்க வேண்டும் என்றும், 4G/5G தரத்திலான சீரான நெட்வொர்க் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: “59 திமுக உறுப்பினர்களுக்கும் அரசு வழங்கும் கார் வேண்டாம்!”.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!
பொருட்கள் ஒதுக்கீட்டிலும் சிரமம்:
மேலும், பொருட்கள் ஒதுக்கீட்டிலும் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடைகளுக்குக் கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 100% பொருட்களை முழுமையாக இறக்க வேண்டும் என்றும், வெளியூர் மற்றும் வெளி மாவட்டக் கார்டுதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற வரும்போது அவர்களுக்குத் தேவையான கூடுதல் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். தமிழக உணவுத்துறை அமைச்சர், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் இதில் உடனடியாகத் தலையிட்டு இணையதளச் சேவையை மேம்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தக் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், அடுத்தகட்டமாகத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.