ரேஷன் அட்டைதாரரகளுக்கு குட் நியூஸ்.. இனி பொருட்கள் வாங்க ஒரிஜினல் கார்டு தேவையில்லை.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..
Ration Card Announcement: எந்த நியாய விலைக் கடையிலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற வசதி குறித்து பொதுமக்கள் பலருக்கும் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. எனவே, இந்தச் சட்டப்பேரவை வாயிலாக அதனை மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புவதாக அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 21, 2026: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு இனி அசல் ரேஷன் அட்டை தேவையில்லை என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் ரேஷன் அட்டை என்பது முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது. ரேஷன் அட்டைகள் அரிசி அட்டை, சர்க்கரை அட்டை உள்ளிட்ட வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மாதந்தோறும் அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வருகின்றனர்.
மேலும், பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களின்போது வழங்கப்படும் நிவாரண உதவிகளைப் பெறுவதிலும் ரேஷன் அட்டை முக்கியப் பங்கு வகிக்கிறது.
ரேஷன் பொருட்கள் வாங்க இனி கார்டு தேவையில்லை:
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அத்துறையின் அமைச்சர் வெங்கட்ரமணன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, தமிழகம் முழுவதும் 38,438 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருவதாகவும், அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,495 ரேஷன் கடைகள் இயங்கி வருவதாகவும் தெரிவித்தார். அதற்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் படிக்க: விவசாயிகள் கவனத்துக்கு… தனித்துவ அடையாள எண் கண்டிப்பாக பெற வேண்டும்.. கீழப்பாவூர் வேளாண் அதிகாரி சேதுராமன் அறிவுறுத்தல்!
ரேஷன் பொருட்களை வாங்க குறிப்பிட்ட ஒரு கடைக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை என்றும், அருகில் உள்ள எந்த நியாய விலைக் கடைக்கும் சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சிலர் ரேஷன் கடைக்கு வந்து அசல் ரேஷன் அட்டையை வீட்டில் மறந்து வைத்துவிட்டதாகக் கூறி திரும்பிச் செல்கின்றனர். ஆனால், ரேஷன் அட்டையின் மென்பிரதி (Soft Copy) இருந்தாலே போதுமானது என்றும், அட்டை எண் இருந்தாலும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் கூறினார். மொபைல் போனில் உள்ள ரேஷன் அட்டையின் நகலைக் காண்பித்தும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
அருகில் இருக்கும் கடைகளில் பொருட்கள் வாங்கிச்செல்லலாம்:
வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் மற்றும் அடிக்கடி வாடகை வீடு மாறுபவர்களுக்கு இந்த நடைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்த நியாய விலைக் கடையிலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற வசதி குறித்து பொதுமக்கள் பலருக்கும் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. எனவே, இந்தச் சட்டப்பேரவை வாயிலாக அதனை மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புவதாக அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்தார்.
மேலும் படிக்க: “தொகுதி மறுவரையறை.. தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை!”.. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!
இதன் மூலம், ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட ஒரு கடைக்கு மட்டுமே சென்று பொருட்களை வாங்க வேண்டும் என்ற நிலை மாறி, அருகில் உள்ள எந்த நியாய விலைக் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வசதி கிடைத்துள்ளது. அதேபோல், அசல் ரேஷன் அட்டை கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.