AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேரளா, கர்நாடகா, ஆந்திராவின் அதிரடி முடிவு… நதிநீர் உரிமையில் தமிழக அரசுக்கு உருவான புது நெருக்கடி!

CM Vijay Faces River Water Challenges: மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் நதிநீர் உரிமை குறித்துப் பேசினார். ஆனால், மேகதாட்டு அணை மற்றும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதில் கர்நாடகா மற்றும் கேரளா உறுதிகாட்டியுள்ளதால், தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முதலமைச்சர் விஜய்க்குப் பெரிய சவால்கள் எழுந்துள்ளன.

கேரளா, கர்நாடகா, ஆந்திராவின் அதிரடி முடிவு… நதிநீர் உரிமையில் தமிழக அரசுக்கு உருவான புது நெருக்கடி!
தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 21 Aug 2026 08:31 AM IST

சென்னை, ஆகஸ்ட் 21: மாமல்லபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு  நடைபெற்றது. இம்மாநாட்டின் துணைத் தலைவராகத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட தென்னக மாநிலங்களின் தலைவர்களும், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற போதிலும், நதிநீர் பங்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை விவகாரங்களில் அயல் மாநிலங்கள் எடுத்த முடிவுகள் தமிழ்நாட்டிற்குப் புதிய சவால்களை உருவாக்கியுள்ளன.

இதையும் படிக்க: அமித் ஷா வருகைக்கு கருப்புக்கொடியா? காங்கிரஸை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்!

கூட்டாட்சித் தத்துவத்தை முன்வைத்த முதல்வர்:

மாநாட்டில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மாநிலங்கள் வலுவடையும் போதுதான் ஒட்டுமொத்த இந்தியாவும் வலுப்பெறும் என்ற கூட்டாட்சித் தத்துவத்தை முன்வைத்தார். நதிநீர் பங்கீட்டைப் பொறுத்தவரை, மாநிலங்களுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என்றும், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரங்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் ஆணையங்களின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்துவது, மாநிலத்திற்கான உரிய வரிப் பகிர்வை வழங்குவது மற்றும் தொகுதி மறுவரையறையைச் சட்டத்திற்கு உட்பட்டு முறைப்படுத்துவது குறித்தும் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

உறுதியுடன் பேசிய கேரள, கர்நாடக முதல்வர்கள்:

இருப்பினும், மாநாட்டில் பங்கேற்ற அண்டை மாநில முதல்வர்களின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களுக்கு அச்சுறுத்தல் அளிப்பதாக அமைந்துள்ளன. கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பேசுகையில், மேகதாட்டோவில் அணை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக இருப்பதாகவும், அதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விவசாயிகளே பயன்பெறுவர் என்றும் கூறினார். அதேபோன்று, கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், முல்லைப் பெரியாறில் அம்மாநில அரசின் சொந்தச் செலவில் புதிய அணை கட்டும் திட்டத்தை முன்வைத்தார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் கோதாவரி இணைப்பு மற்றும் நதிநீர் பங்கீட்டில் தனது மாநில நலனை மையப்படுத்தியே பேசினார்.

இதையும் படிக்க: அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயர் கைவிட்டது சரிதான்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

எப்படி பாதுகாக்கப் போகிறார் முதல்வர் விஜய்:

இவ்வாறு தமிழ்நாடு தனது அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவிடம் இருந்து நதிநீர் உரிமைகளில் ஒரே நேரத்தில் எதிர்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் சூழல் உருவெடுத்துள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மாறாக, இம்மாநாட்டில் தொகுதி மறுவரையறை குறித்துத் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பாக எதிர்கட்சிகளின் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இத்தகைய சூழலில், அண்டை மாநிலங்களின் கோரிக்கைகளை முறியடித்து, தமிழ்நாட்டின் விவசாயிகள் மற்றும் ஒட்டுமொத்த மாநிலத்தின் நதிநீர் உரிமைகளைச் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் முதலமைச்சர் விஜய் எவ்வாறு பாதுகாக்கப் போகிறார் என்பது மிக முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

Follow Us