அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.26.5 லட்சம் மோசடி.. வசமாக சிக்கிய அரசு அச்சக ஊழியர்.. சென்னையில் பரபரப்பு!
Chennai Govt Employee Arrested : சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இரு கும்பங்களை சேர்ந்தவர்களிடம் ரூ. 26.5 லட்சம் பெற்று மோசடி செய்த அரசு அச்சக ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் .
சென்னை மாவட்டம், கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முரளி ( வயது 39). இவர், தொழிலாளர் நலத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணிபுரிந்து வரும் தாவீத் ராஜா ( வயது 34) என்பவர், முரளியை தொடர்பு கொண்டு தனக்கும், நிதி துறையில் பணிபுரிந்து வரும் தனது தாய்க்கும் பல்வேறு அரசு அதிகாரிகளை தெரியும் என்றும், இதன் மூலம் பலருக்கு அரசு வேலைகளை வாங்கி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய முரளி தனக்கும், தனது மனைவிக்கும் அரசு பணி வாங்கித் தருமாறு தெரிவித்துள்ளார். அதன்படி, முரளிக்கு பள்ளிக் கல்வித் துறையில் வாகன ஓட்டுநர் பணியும், அவரது மனைவிக்கு லேப் டெக்னீசியன் பணியும் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார்.
முதல் கட்டமாக ரூ. 13 லட்சத்தை பெற்ற அரசு ஊழியர்
இதற்காக ரூ.13 தரவேண்டும் என்று முரளியிடம், தாவீத் ராஜா தெரிவித்துள்ளார். இதை உண்மை என நம்பிய முரளி, இரு தவணைகளாக அவர் கேட்ட ரூ. 13 லட்சத்தை தாவீத் ராஜாவிடம், முரளி கொடுத்துள்ளார். இது மட்டும் இன்றி, தனது சகோதரர் சிவா மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கும் அரசு வேலை வாங்கி தர வேண்டும் என்று தாவீத் ராஜாவிடம், முரளி கூறியுள்ளார். அதற்காக மேலும் ரூ.13.50 லட்சம் தர வேண்டும் என்று தாவீத் ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி விடுதியில் ஆந்திர மாணவி சடலமாக மீட்பு.. மாணவர்கள் கொந்தளிப்பு.. போலீசார் குவிப்பு!!




2- ஆவது தவணையாக ரூ. 13.5 லட்சம் பெற்றார்
இதையும் உண்மை என நம்பிய முரளியின் சகோதரர் சிவா ரூ.13.5 லட்சத்தை, தாவீத் ராஜாவிடம் வழங்கி உள்ளார். ஆனால், அவர் கூறியவாறு மேற்கண்ட 4 பேருக்கும் அரசு வேலை வாங்கி தராமல் காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக, தாவீத் ராஜாவிடம் முரளி மற்றும் அவரது சகோதரர் சிவா ஆகியோர் கேட்டுள்ளனர், இதற்கு, அவர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். மேலும், அவரை சந்திப்பதையும் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முரளி இது தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அரசு அச்சக ஊழியர் அதிரடி கைது – பத்திரம் பறிமுதல்
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அரசு அச்சக ஊழியர் தாவீத் ராஜா அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த பணத்தில் பல்லாவரத்தில் நிலம் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, தாவீத் ராஜாவை கைது செய்த போலீசார், அவர் வாங்கி இருந்த நிலத்துக்கான பத்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க: சரசரவென சாய்ந்த மின் கம்பங்கள்.. சிங்காநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு.. சீரமைப்பு பணியில் மின்துறை ஊழியர்கள்!