தவெக 10 சீட்க்கு மேல் ஜெயிச்சா மீசையை மழிக்கிறேன்.. சவாலை செய்து காட்டிய அதிமுக மாவட்ட செயலர்!
Nilgiris AIADMK Secretary Bala Nandakumar : தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்ற காரணத்தால் சவால் விட்டது போல, நீலகிரி அதிமுக மாவட்ட செயலாளர் பால நந்தகுமார் தனது மீசையை மழித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளராக வழக்கறிஞர் பாலநந்தகுமார் என்பவர் இருந்து வருகிறார். இவர், தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேடைகளில் பேசுகையில், தமிழக வெற்றி கழகம் 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது எனவும், அப்படி வெற்றி பெற்றால் எனது மீசையை மழித்துக் கொள்கிறேன் எனவும் சவால் விட்டு பேசி இருந்தார். தற்போது, தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், சவால் விட்டது போல, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் பால நந்தகுமார் தனது மீசையை மழித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் மீசை மழிக்கப்பட்ட தனது புகைப்படத்தை பதிவிட்டு அதற்கான காரணத்தையும் விளக்கி உள்ளார்.
மீசை மழிக்கப்பட்டதற்கான காரணம் என்ன
அதில், தமிழக வெற்றி கழகம் 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்ற காரணத்தால் மீசையை மழித்துக் கொள்கிறேன் என்று நான் விடுத்த சவாலையும், தவெக அரசு 100 நாள் ஆட்சி நிறைவுற்றதையும் எனது நண்பர்கள் சுட்டிக்காட்டினர். ஏதோ மாயாஜாலம் செய்து 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விட்டது. எனது நண்பர்கள் நினைவூட்டியது போல, எனது மீசையை மழித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: சென்னையில் தங்கை முறை பெண்ணுடன் கள்ளக்காதல்.. கண்டித்தும் கேட்காததால் கொலை.. 3 பேர் அதிரடி கைது!




தேர்தலில் பெரிதளவில் தவெக தடம் பதிக்காது
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 15 சதவீத வாக்கு வங்கிகள் வரை பெரும் எனவும், சுமார் 30 முதல் 35 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதே போல, தேர்தல் வியூக நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் தமிழக வெற்றி கழகம் சொற்ப தொகுதிகளிலேயே வெற்றி பெறும் எனவும், ஆட்சி அமைக்காத எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான போது, தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மை பலமான 118 தொகுதிகள் இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வாழப்பாடி அரசு விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. 4 பணியாளர்கள் சஸ்பெண்ட்.. இருவர் கைது!