முதல்வர் விஜய் சிரிப்பதை பார்க்க தனி ஸ்கீரின் வேணும்.. பேரவையில் தவெக எம்எல்ஏ வைத்த விசித்திர கோரிக்கை!
CM Joseph Vijay Smile : தமிழக சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சிரிப்பதை பார்ப்பதற்காக தனியாக ஒரு ஸ்கீரின் அமைக்க வேண்டும் என்று மதுரை வடக்கு தொகுதி தவெக எம். எல். ஏ. கல்லாணை கோரிக்கை வைத்தார்.,
தமிழக சட்டப்பேரவையில் துறைகள் வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 21- ஆம் தேதி) காலை 9:30 மணிக்கு வழக்கம் போல சட்டப்பேரவை கூடியது. இதில், மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழக எம்எல்ஏ கல்லாணை தன்னுடைய தொகுதிகள் தொடர்பாகவும், கோரிக்கைகள் தொடர்பாகவும் பேசினார். அப்போது, ஒரே ஒரு தனிப்பட்ட கோரிக்கையை முன் வைப்பதாக சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகரிடம் தெரிவித்தார். இதில், நான் சிறு வயதாக இருந்த போது, தலைவர் தளபதி ஜோசப் விஜய் எங்கு சென்றாலும் ஓடோடி சென்று பார்த்து வந்தோம். தற்போது, சட்டப் பேரவையில் அவரது அருகிலேயே அமரும் பாக்கியத்தை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கி உள்ளார்.
குலுங்கி குலுங்கி சிரித்த முதல் அமைச்சர் விஜய்
இதில், ஒரு சிறிய வருத்தம் உள்ளது. அது என்னவென்றால் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் முகத்தை எங்களால் நேரடியாக பார்க்க முடியவில்லை. திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை, சாமி அமைச்சர் என்று கூறிய போது, முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் குலுங்கி குலுங்கி சிரித்தார். இதனை, பேரவையில் எங்களால் பார்க்க முடியவில்லை. ஆனால், இந்த காட்சிகளை வீட்டுக்கு சென்று டிவியில் பார்த்து ரசித்தோம்.
மேலும் படிக்க: கார் விவகாரத்தில் உதயநிதி – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே கடும் வாக்குவாதம்..




விஜய் சிரிப்பதை பார்க்க தனி ஸ்கீரின் வேண்டும்
எதிர்க் கட்சிகள் தன்னுடைய அரசை பற்றியும், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பற்றியும் குறை கூறினாலும் கூட, அதில், நகைச்சுவை இருந்தால் சிரிக்கிற ஒரே தலைவன் எங்கள தளபதி முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தான். மறைந்த மாபெரும் தலைவர் அண்ணா வழிவந்த எங்கள் அண்ணாவின் அழகிய முகத்தை பார்ப்பதற்கு சட்டப்பேரவையில் தனியாக ஒரு ஸ்கிரீன் அமைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். இதனை, என்னுடைய தனிப்பட்ட கோரிக்கையாக முன் வைக்கிறேன் என்று தெரிவித்தார்.
பேரவையில் நிலவிய கலகலப்பான சூழல்
இதற்கு, தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிரித்த முகத்துடன் மேஜைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால், பேரவையில் சிறிது நேரம் கலகலப்பான சூழல் நிலவியது. மதுரை வடக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப் பேரவை உறுப்பினர் கல்லாணை வைத்த கோரிக்கை விசித்திரமாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: “தப்பா இருந்தா எங்க மேல கேஸ் போடுங்க!”.. சட்டமன்றத்தில் சவால் விட்ட கே.என்.நேரு!!