கவர்னர் மாளிகையில் நள்ளிரவில் நுழைந்த நபர்… விருந்தினர் அறையில் சொகுசான தூக்கம்… அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!
Puducherry Governor Residence: புதுச்சேரி மாநில கவர்னர் மாளிகையில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து விருந்தினர் அறையில் படுத்து தூங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் பாரதி பூங்கா அருகே உள்ள செயின்ட் மார்ட்டின் தெருவில் கவர்னர் மாளிகை அமைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த கவர்னர் மாளிகையானது சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதனால், இந்த மாளிகையில் ஏராளமான இடங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கவர்னர் அலுவலகம் குருசுகுப்பம் பழைய சாராய ஆலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலாச்சார மையக் கட்டடத்திற்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால், கவர்னர் கைலாசநாதன் தனது குடும்பத்தினருடன் இங்கு தங்கி இருந்து வருகிறார். ஆனால், அலுவலகப் பணிகள் மட்டும் பழைய கவர்னர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு கவர்னர் இல்லத்துக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.
கவர்னர் மாளிகை விருந்தினர் அறையில் தூங்கிய நபர்
அவர், விருந்தினர் அறையில் படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இதனை, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பின்னர் மறுநாள் காலை அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் விருந்தினர் மாளிகையில் மர்ம நபர் ஒருவர் படுத்து தூங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த நபரை போலீசார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அந்த நபரை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் கவர்னர் மாளிகை போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க: காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ஷாக்கான கார்த்திக் சிதம்பரம்… அரசியல் பகையா?




ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்
அந்த நபரிடம் முத்தியால்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த இளைஞர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹரிதிக் ஜா என்பதும் கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருவதும் தெரியவந்தது. இவர், தன்னுடன் படித்து வரும் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது, கடற்கரை பகுதியில் உள்ள உணவகத்தில் மது அருந்ததிதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட அதிகமான போதையால் கடற்கரையை ஒட்டி உள்ள கவர்னர் மாளிகையின் கதவை ஏறி குதித்து உள்ளே சென்று விருந்தினர் மாளிகையில் படுத்து தூங்கியது தெரியவந்தது.
4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார்
இதைத் தொடர்ந்து, மாணவர் ஹரித்திக் ஜா மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விசாரணையில் அந்த நபர் அளித்த தகவல்கள் உண்மையானதா என்பது தொடர்பாகவும், அவர் கல்வி பயின்று வரும் கல்லூரியின் நிர்வாகத்தை தொடர்புகொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநிலத்தின் கவர்னர் மாளிகையில் நள்ளிரவில் ஒரு இளைஞர் அத்துமீறின் நுழைந்து தூங்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கவர்னர் மாளிகையின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும் படிக்க: கோவை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு மயங்கி விழுந்த 43 மாணவர்கள்.. மருத்துவமனையில் அனுமதி!