தகிக்க விடும் வெயில்… குளிர்ச்சியான பீரை நாடும் மது பிரியர்கள்… எகிறும் விற்பனை!
Beer Sales Increase: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், ஏராளமான மது பிரியர்கள் குளிர்ச்சியான பீர் வகைகளை நாட தொடங்கி உள்ளனர். இதனால், தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் பீர்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் கோர முகம் தென்படத் தொடங்கி உள்ளது. ஏனென்றால், தற்போது வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அதிகமாக காணப்படுகிறது. இதில், வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தற்போது 100 டிகிரி மற்றும் அதற்கு மேலும் வெயில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு குறைவாக வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ள மாவட்டங்களிலும் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பகல் நேரத்தில் கடுமையான வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசினாலும், வீடுகளில் உள்ளே கொதிக்கும் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் இருந்து வரும் நிலையில், கோடை காலத்திலும், கத்தரி வெயில் காலத்திலும் வெயிலின் உக்கர தாண்டவம் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
வெயிலின் தாக்கத்தால் பீர்கள் விற்பனை அதிகரிப்பு
இதனால், தற்போது ஏராளமான பொதுமக்கள் குளிர்ச்சியான இடங்கள், நீர் வீழ்ச்சி பகுதிகள் ஆகியவற்றை தேடி செல்லவும், தஞ்சமடையவும் ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஏராளமானோர் குளிர்ச்சியான பீர்களை அருந்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், தமிழகத்தில் உள்ள மது கடைகளில் பீர்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் சுமார் 5,400-க்கும் மேற்பட்ட மது கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மது கடைகளில் வழக்கமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பிராந்தி வகைகளின் விற்பனை அதிகமாக காணப்படும்.
மேலும் படிக்க: பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!




அமோகமாக நடைபெற்று வரும் பீர் விற்பனை
ஆனால், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏராளமானோர் பீர்களை அதிகளவு வாங்கி செல்ல ஆரம்பித்து விட்டனர். இதனால், இந்த மாதங்களில் பிராந்தி வகைகளை விட பீர் வகைகளின் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. தற்போது, பிப்ரவரி மாத இறுதியில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், மது பிரியர்கள் விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட வகைகளை தவிர்த்து பீர் வகைகளை அதிகளவு வாங்கி செல்கிறார்கள். இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பீர் வகைகள் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது.
கோடை காலத்தில் பீர் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு
அதிலும் குறிப்பாக இரவு 7 மணிக்கு மேல் பீர் வகைகள் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. அதே வேளையில் பிராந்தி உள்ளிட்ட மதுக்களின் விற்பனையும் ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. பொதுவாக ஒரு நாளுக்கு சுமார் ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரை மது விற்பனை நடைபெறும். அதுவே பண்டிகை போன்ற நாட்களில் குறைந்தது ரூ.150 முதல் ரூ.170 கோடி வரை மதுக்கள் விற்பனையாகும். கோடை காலம் நெருங்குவதால் இதன் விற்பனை சற்று அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!