பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை… 10 கி.மீ. பிரம்மாண்ட ரோடு ஷோ.. திக்குமுக்காட போகும் திருச்சி!
PM Modi Visit Trichy: திருச்சியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதைத் தொடர்ந்து, எடைமலைப்பட்டி புதூர் பகுதியில் இருந்து திருச்சி விமான நிலையம் வரை சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி மாவட்டம், எடைமலைபட்டி புதூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று புதன்கிழமை ( மார்ச் 11) நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமான மூலம் புதுடெல்லியில் இருந்து கேரள மாநிலத்துக்கு வருகை தருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, கொச்சியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு இன்று மாலை 5 மணி அளவில் திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தருகிறார். அங்கிருந்து, 5:15 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு பஞ்சப்பூர் புதிய பஸ் முனையம் அருகே உள்ள எடைமலைபட்டி புதூரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் தரையிறங்குகிறார். பின்னர், அந்தப் பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
10 கி.மீட்டர் தொலைவுக்கு பிரம்மாண்ட ரோடு ஷோ
இதைத் தொடர்ந்து, 6:45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சப்பூர், எடைமலைப்பட்டி புதூர், சிறப்பு காவல் படை முகாம், மன்னார்புரம் நான்கு சாலை, டிவிஎஸ் டோல்கேட் வழியாக திருச்சி விமான நிலையம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இதை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகைக்காக திருச்சி மாநகரில் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.




மேலும் படிக்க: Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
களத்தில் இறங்கிய சிறப்பு பாதுகாப்பு படை
மேலும், சிறப்பு காவல் படை போலீசார் திருச்சி விமான நிலையம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் ஆகிய பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அதன்படி, பிரதமரின் விமானம் நேற்று 2 முறை திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. இதேபோல, எடைமலைப்பட்டி புதூரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடிலும் ஒரே மாதிரியான 3 ஹெலிகாப்டர்கள் தரையிறக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. மேலும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் திருச்சி போலீசார் பிரதமரின் வாகனத்துக்கு முன்னும் பின்னும் பாதுகாப்புக்கு வரும் வகையில் ஒத்திகை நடைபெற்றது.
ரூ.5,655 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டங்கள்
முன்னதாக, ரூ,5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன், பாமக தலைவர் அன்புமணி, ஐ. ஜே. கே. தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் படிக்க: ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்