காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ஷாக்கான கார்த்திக் சிதம்பரம்… அரசியல் பகையா?
Karthik Chidambaram Office: சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி சென்று விட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் காங்கிரஸ் எம். பி.யான கார்த்திக் சிதம்பரத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ( மார்ச் 10) நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், அலுவலகத்தின் முன் பகுதியில் பெட்ரோல் பற்றி எரிந்ததில் கருமையாக படர்ந்துள்ளது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், காரைக்குடி தெற்கு மற்றும் வடக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி அதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசியல் காழ்ப்பணர்ச்சி காரணமா
காங்கிரஸ் எம். பி. யின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிகழ்ந்ததா. அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் எம்பி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் ரீதியான போட்டிகள் அதிகரித்து காணப்படும்.
மேலும் படிக்க: தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு.. ஆட்டோக்கள் இயங்குவதில் சிக்கல்.. நிலமை என்ன?




கட்சியினர் இடையே மோதல் போக்கு
எதிர்க்கட்சிகள் மட்டும் இன்றி, கூட்டணியில் அங்க வகிக்கும் கட்சிகள் இடையேயும் போட்டி மற்றும் பொறாமைகள் ஏற்படும். இதன் காரணமாக கட்சியினர் மத்தியில் வாக்குவாதம், கைகலப்பு ஆகியவை நடைபெற வாய்ப்புள்ளது. இதேபோல, ஒரே தொகுதியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடும் சூழலில், பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் காரணமாகவும் மோதல் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.
அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு
இந்த நிலையில், கார்த்திக் சிதம்பரம் எம்பி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அரசியல் காரணமாக நடந்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் இழுபறி நீடித்து வந்தது. இதில், இரு கட்சிகளை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில், கார்த்திக் சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கொலை, கொள்ளை, போதை… தமிழகத்தின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறி