சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பது யார்? திமுக-அதிமுக-தவெக-க்கு எந்த இடம் கிடைக்கும்.. யாரும் எதிர்பாராத கருத்துக்கணிப்பு!
2026 Tamil Nadu Assembly Elections : தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எவ்வளவு வாக்கு சதவீதம் பெறும் என்பன உள்ளிட்டவை தொடர்பான பிரபல தனியார் நிறுவனத்தில் கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன .
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு மேல் நடைபெற இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு வருகிற மார்ச் 15- ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அதன்படி, வருகிற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மக்களின் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்ட தேர்தல் கருத்துக்கணிப்பில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும், எந்தெந்த கட்சிகள் எந்தெந்த இடத்தை பிடிக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அளவிலான விரிவான அறிவியல் பூர்வ கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டது.
41.5 சதவீத வாக்குகளுடன் திமுக ஆட்சி அமைக்கும்
அதன்படி, 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், முதல் கட்ட ஆய்வுகளின் படி, திராவிட முன்னேற்ற கழகம் 41.5 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக 36.2 வாக்கு சதவீதம் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் எனவும், 3- ஆவது பெரிய கட்சியாக 13.6 சதவீத வாக்கு வங்கியுடன் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் உருவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, நாம் தமிழர் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதன் வாக்கு சதவீதம் 7.9- ஆக குறையும் என்றும், அரசியல் களத்தில் 4- ஆவது இடத்தை பிடிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: சீமான் சின்னம் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கீடு… தேர்தல் ஆணையம் உத்தரவு!




கணிசமான பலத்தை பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம்
தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு குறைந்தது 30 ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், சென்னையில் பல்வேறு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான பலத்தை பெற்றுள்ளது. தற்போதைய சூழலில் திமுகவுக்கு அடுத்தபடியாக 2- ஆவது பலமான அரசியல் சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்து வருகிறது. இதில், பெரும்பாலான தொகுதிகளில் திமுக முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இளைஞர்கள் மத்தியில் பிரதான இடம் பிடித்த தவெக
இருந்தாலும், அந்த தொகுதிகளில் உள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தவெக பிரதான இடத்தை பெற்று முன்னிலையில் உள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 மற்றும் 2024- ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் கடந்த 2024- ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் இதே நிறுவனம் துல்லியமான கருத்துக்கணிப்பை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ஷாக்கான கார்த்திக் சிதம்பரம்… அரசியல் பகையா?