திடீரென குறுக்கே வந்த பைக்.. கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி வாகனம்.. அடுத்து நேர்ந்த சம்பவம்..!
Coimbatore Private School Accident : கோயம்புத்தூரில் இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக திருப்பிய போது, மின் கம்பி மீது மோதிய விபத்தி ல் மாணவர்கள் காயமடைந்தனர். இந்த திடீர் விபத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .
கோயம்புத்தூர் மாவட்டம், கணுவாய்- துடியலூர் சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி பேருந்தில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை ( ஜூன் 16) மாலையில் பள்ளி முடிந்து மாணவர்களை ஏற்றுக்கொண்டு பள்ளி வாகனம் புறப்பட்டு சென்றது. தடாகம் சாலையில் திருவள்ளூர் நகர் பகுதியில் பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் வேகமாக வந்ததாக தெரிகிறது. இதனால், அவர்கள் மீது வாகனம் மோதாமல் இருப்பதற்காக, பள்ளி வாகனத்தின் ஓட்டுனர் வலது புறமாக திருப்பி உள்ளார். இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகில் இருந்த மின்கம்பி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் காயம்
இந்த விபத்தில், பள்ளி குழந்தைகள், ஓட்டுநர்கள், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் என அனைவரும் காயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டுகள் மற்றும் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் விரைந்து சென்று பேருந்தின் உள்ளே சிக்கி இருந்த மாணவர்களை மீட்டனர். தொடர்ந்து, அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி.. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்.. தவெகவில் இணைகிறார்?




மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவ, மாணவிகள்
அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், மற்றொரு பள்ளி வாகனம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அதில் மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து சம்பவம் குறித்து தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் விபத்து காட்சிகள்
இந்த விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே, போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: காலாவதியான நோட்டரி சான்று? செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு!