காலாவதியான நோட்டரி சான்று? செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு!
K. A. Sengottaiyan Against Case: கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே. ஏ. செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பிரவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் .
அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்து வந்த கே. ஏ. செங்கோட்டையன் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்படி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, அவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக, அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், செங்கோட்டையன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சான்று அளித்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகி உள்ளது. எனவே, அந்த வேட்பு மனுவை ஏற்றது தவறாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்ற கே.ஏ.செங்கோட்டையன்
தமிழக சட்டமன்ற தேர்தலில் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே. ஏ. செங்கோட்டையன் 82,612 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் நல்ல சிவம் 65 ஆயிரத்து 992 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரபு 56 ஆயிரத்து 232 வாக்குகளும் பெற்றிருந்தனர். திமுக வேட்பாளரை விட 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் செங்கோட்டையன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மாணவர்களே நோட் பண்ணுங்க.. இந்தாண்டு எத்தனை நாள்கள் லீவு.. அடுத்த சம்மர் லீவு அப்டேட்!
திருப்பத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு
ஏற்கனவே, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளரான பெரிய கருப்பன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில், தபால் வாக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தவெக வேட்பாளர் வெற்றியை ஏற்கக்கூடாது என்றும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தவெக தலைவரும், முதல்வருமான விஜய் வெற்றிக்கு எதிரான வழக்கு
இதேபோல, தமிழக வெற்றி கழகத் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருந்தார். இந்த தொகுதியில் இவரது வெற்றியை எதிர்த்தும், இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்றும், விஜய் ராஜினாமா செய்ததால் தன்னை அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி திமுக வேட்பாளராக போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனால், தவெகவில் 3 பேர் மீது தேர்தல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: BREAKING: திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கு உயர்வு.. வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளை அறிக்கை வெளியீடு!