காக்கி சட்டையில் ஒர் கருப்பு ஆடு.. புதுச்சேரியில் மனநலம் குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை.. இரவோடு இரவாக காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
Puducherry Police constable Transferred: புதுச்சேரியில் மருத்துவமனையில் மனநலம் குன்றிய இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போலீஸ்காரர் இரவோடு இரவாக ஏனாம் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் திருக்கனூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், சம்பவத்தன்று இரவு சாலையில் நடந்து சென்ற மனநலம் குன்றிய இளம் பெண்ணை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, மருத்துவமனையில் பணியில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. அப்போது, அங்குள்ள நோயாளிகள் அறையில் அந்த இளம் பெண்ணை போலீஸ்காரர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அப்போது, அந்த பெண்ணின் சத்தம் கேட்டு அங்கு வந்த மருத்துவர் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த போலீஸ்காரரை கண்டித்துள்ளார். இதற்கு, அந்த காவலர் என்னையே கேள்வி கேட்கிறாயா. நான் அப்படிதான் செய்வேன் என்று கூறிவிட்டு அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியே சென்று விட்டார்.
மருத்துவரின் புகாரை பெற மறுத்த போலீசார்
இந்த சம்பவம் தொடர்பாக அந்த மருத்துவர் திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அந்த புகாரை போலீசார் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, மருத்துவ கண்காணிப்பாளரிடம் அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மருத்துவ கண்காணிப்பாளர் திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் பின்னர் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு மருத்துவ கண்காணிப்பாளர் இமெயில் மூலமாக புகார் அனுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: பரந்தூர் விமான நிலையம்… முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டம்.. என்ன முடிவெடுக்கப் போகிறார் விஜய்!




இரவோடு இரவாக ஏனாம் ஆயுதப்படைக்கு மாற்றம்
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் இரவோடு இரவாக சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏனாம் பிராந்திய ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி அலுவலகத்தின் எஸ். பி. மோகன்குமார் பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக, அவர் கூறுகையில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர், திருக்கனூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் கண்ணிய குறைவாக நடந்துள்ளார். மேலும், அவர் காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படியாமல் இருந்து வந்தார் என்று திருக்கனூர் இன்ஸ்பெக்டர் டிஜிபி அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தார்.
காவலர் பணியிட மாற்றத்துக்கான காரணம்
அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவலர் ஏனாம் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், இந்த காவலர் மனநலம் குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் தகவல் தற்போது தான் தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறோம் என்று கூறினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கோரிமேடு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இண்டி கூட்டணியில் இணையுமாறு தவெகவுக்கு அழைப்பு… திமுகவை டீலில் விட்ட காங்கிரஸ்.. என்ன முடிவில் இருக்கிறார் விஜய்!