இண்டி கூட்டணியில் இணையுமாறு தவெகவுக்கு அழைப்பு… திமுகவை டீலில் விட்ட காங்கிரஸ்.. என்ன முடிவில் இருக்கிறார் விஜய்!
TVK Participating In The India Alliance: இண்டி கூட்டணியில் பங்கேற்பதற்கு தமிழக வெற்றிக் கழகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், முதல்வர் விஜய் பங்கேற்பார் என்றே பரவலாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற காங்கிரஸ், தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி தலைமையிடம் தெரிவிக்காமல் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைந்தது. இதன் காரணமாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த கூட்டணி உறவு முறிந்தது. இதனால், இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட தொடங்கினர். இதன் எதிரொலியாக தேசிய அளவில் இண்டி கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் விலகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், இண்டி கூட்டணியில் இணையுமாறு தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
இண்டி கூட்டணியில் இணையுமாறு தவெகவுக்கு அழைப்பு
அதன்படி, டெல்லியில் வருகிற ஜூன் 8- ஆம் தேதி ( திங்கட்கிழமை) நடைபெறும் இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இண்டி கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இண்டி கூட்டணி உருவாக்கப்பட்டது.
மேலும் படிக்க: கோவையில் திடீரென மோப்ப நாயுடன் களமிறங்கிய போலீஸ் படை.. ஆம்னி பேருந்துகள் சல்லடை சல்லடையாக அலசல்.. என்ன காரணம்!




இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள்
இந்த கூட்டணியில் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனிடையே, திமுக கூறிய சனாதன எதிர்ப்பு காரணமாக வட மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இந்த விவகாரம் இண்டி கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி இருந்தது. மேலும், கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளிடையே பெரும் கருத்து வேறுபாட்டையும் ஏற்படுத்தியது.
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கவில்லை
இந்த விவகாரம் இண்டி கூட்டணியின் வெற்றிக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையில், இண்டி கூட்டணியில் இருந்து திமுக வெளியேறும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இண்டி கூட்டணியில் தமிழக வெற்றி கழகத்தை இணைய வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை விரும்புவதாகவும், அதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதே வேளையில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கோவையில் தனியார் தியேட்டரில் திடீர் கலாட்டா.. பொதுமக்களிடம் உரிமையாளர்கள் – ஊழியர்கள் கடும் வாக்குவாதம்!