சென்னை அருகே 2 வாரங்களில் 3 ஏடிஎம் கொள்ளை – அரசின் தோல்வி… அன்புமணி கண்டனம்
ATM Robberies in Chennai : சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 3 இடங்களில் ஏடிஎம் கொள்ளை நடந்துள்ளன. வட மாநிலக் கொள்ளையர்களின் தொடர் ஏடிஎம் கொள்ளைகள் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்க காவல்துறை தவறியது கண்டிக்கத்தக்கது என்றும் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
சென்னை, செப்டம்பர் 6 : சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 3 இடங்களில் ஏடிஎம் கொள்ளை நடந்துள்ளன. வட மாநிலக் கொள்ளையர்களின் தொடர் ஏடிஎம் கொள்ளைகள் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்க காவல்துறை தவறியது கண்டிக்கத்தக்கது என்றும் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். மேலும், வட மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் எந்த அச்சமும் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்து ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபடுவதும், கொலைக்குற்றங்கள் அதிகரிப்பதும் ஆட்சியின் தோல்வியாகவே கருதப்படும் என்றார்.
சென்னை அருகே 2 வாரங்களில் 3 ஏடிஎம் கொள்ளை
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 3 இடங்களில் ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்தது மட்டுமின்றி, ஒரு இடத்தில் முழு ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் சம்பவங்களால் பொதுமக்களிடையே அச்சம் அதிகரித்துள்ள நிலையில், கொள்ளைகளைத் தடுக்க காவல்துறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இரண்டு வாரங்களுக்கு முன்பு தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் ஒன்று உடைக்கப்பட்டு, அதிலிருந்து ரூ.11 லட்சம் அளவிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள், குன்றத்தூர் – ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ள சோமங்கலம் பகுதியில் மற்றொரு ஏடிஎம் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதற்கிடையில், செப்டம்பர் 5, 2026 நேற்று நடைபெற்ற 3வது சம்பவத்தில், திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே இருந்த ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையர்கள் முழுமையாக தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த 3 சம்பவங்களிலும் ராஜஸ்தானைச் சேர்ந்த கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 25, 2026 அன்று சோமங்கலத்தில் நடைபெற்ற இரண்டாவது ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க, காவல்துறையின் தனிப்படை அதிகாரிகள் தெலங்கானா – மகாராஷ்டிரா எல்லையில் முற்றுகையிட்டதாகவும், அப்போது கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து ஹரியானா நோக்கி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்புமணி ராமதாஸின் எக்ஸ் பதிவு
3 ATM Robberies in Chennai’s Suburbs in 2 Weeks: Is the Govt Going to Remain a Spectator Without Preventing the Activities of Robbers from North India?
In the suburban areas of Chennai, ATMs belonging to banks have been robbed at three locations in just the past two weeks—by…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 6, 2026
அப்படி இருக்கும்போது, அதன்பிறகு நடைபெற்ற மூன்றாவது ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே 2 ஏடிஎம் கொள்ளைகள் நடைபெற்ற நிலையில், ஏடிஎம்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை காவல்துறை மேலும் தீவிரப்படுத்தியிருக்க வேண்டாமா என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
இதற்கிடையே சென்னை பெசன்ட் நகரில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என கூறப்படும் தவெக நிர்வாகி கண்ணன் என்பவர், ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவமும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏடிஎம் கொள்ளை, கொலை போன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், அவற்றைத் தடுக்க காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
வட மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் எந்தவித அச்சமுமின்றி தமிழகத்துக்குள் வந்து ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபடுவதாகவும், கொலை சம்பவங்களும் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய சம்பவங்களைத் தடுக்க அரசு காவல்துறையின் கண்காணிப்பையும் உளவுத்துறையின் செயல்பாட்டையும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.