சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிப் படுகொலை.. இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!!
Udhayanidhi Stalin Slams TVK: தலைநகர் சென்னையில் தவெக பிரமுகர் ஒருவர் வீதியில் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் மானியக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் முன்பே இச்சம்பவம் நடந்துள்ளதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை, செப்.06: தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான கண்ணன் என்பவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் அரங்கேறிய இந்த ரத்த ஆறான படுகொலை தொடர்பாக சாஸ்திரி நகர் காவல் துறையினர் உடனடியாக 5 தனிப்படைகளை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி நள்ளிரவு முழுவதும் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க: ரேஷன் கார்டு விண்ணப்பங்களில் புதிய மாற்றம்.. கவலையே வேண்டாம்.. இனி அலையத் தேவையில்லை!!
விசாரணையில் திடுக்கிடும் பின்னணி:
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இக்கொலை சம்பவம் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய பகை மற்றும் பழிக்குப்பழி உணர்ச்சியால் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட கண்ணன், கடந்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு ‘பி’ கேட்டகரி சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார். இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது காவல் துறையின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் பதிலுரைக்கு முன்பு:
நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.
அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட…
— Udhay (@Udhaystalin) September 6, 2026
இதனிடையே, தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவர் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை என்று குறிபிட்டுள்ள அவர், முதலமைச்சர் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலுரை அளிக்க உள்ள சூழ்நிலைக்கு முன்பாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கின் நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் கேள்வி:
சென்னை தலைநகரிலேயே நடுரோட்டில் ஒரு நபர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா அல்லது சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமடையும் குப்பைத் தொட்டியாக தவெக கட்சி மாறியிருப்பதை நினைத்து வருந்துவதா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாநிலத்தில் நடக்கும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கு திமுகவை எவ்வாறு குற்றம் சாட்டலாம் என்று யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: உள்ளாட்சித் தேர்தல் முதல் பொதுக்குழு வரை.. அதிமுக மா.செக்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. மூத்த நிர்வாகிகள் புறக்கணிப்பு..
சட்டமன்ற விவாதமும் அரசியல் களமும்:
சட்டமன்ற கூட்டத்தொடரில் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் சார்பில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கொலைகள் மற்றும் ஆணவக் கொலைகள் போன்ற பல்வேறு முக்கிய விவகாரங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்குப் பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் நாளை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலுரை அளிக்க உள்ள நிலையில், தலைநகரிலேயே இத்தகைய படுகொலை சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இப்பதிவு அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.