திடீர் மின் கட்டண உயர்வா?.. களத்தில் இறங்கும் மின்வாரியம்.. ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு!!
TNEB Electricity Bill Hikes: தமிழகத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளதாகப் புகார்கள் எழுந்த நிலையில், 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகளில் 20% கட்டணம் அதிகரித்தால் ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை வெறும் கண் துடைப்பு என ஓய்வுபெற்ற மின் பிரிவு செயற்பொறியாளர் விமர்சித்துள்ளார்.
செப்டம்பர், 06: தமிழகத்தில் அண்மைக்காலமாக வீடுகளுக்கு விதிக்கப்படும் மின் கட்டணம் வழக்கத்தை விடக் மிகக் அதிகமாக உயர்ந்து வருவதாகப் பொதுமக்கள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் தொடர்ச்சியாகப் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. கணக்கீட்டு முறையில் உள்ள குளறுபடிகள் மற்றும் திடீர் கட்டண உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், மக்களின் அதிருப்தியைக் குறைக்கவும், மின் கட்டண உயர்வு தொடர்பான புகார்களைக் களையவும் மின்சார வாரியம் புதிய ஆய்வு நடவடிக்கை தொடர்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எனினும், இந்த உத்தரவின் சாத்தியக்கூறுகள் குறித்து வல்லுநர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: ரேஷன் கார்டு விண்ணப்பங்களில் புதிய மாற்றம்.. கவலையே வேண்டாம்.. இனி அலையத் தேவையில்லை!!
மின்வாரியத்தின் புதிய ஆய்வு உத்தரவு:
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகளில், முந்தைய மாதங்களை விட மின் கட்டணம் 20% வரை திடீரென அதிகரித்திருந்தால் அது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதக் கணக்கீடுகளை விடச் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதக் கணக்கீட்டில் 20% உயர்வு பதிவாகி இருந்தால், அந்த இணைப்புகளைப் பரிசோதிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் நுகர்வோரின் புகார்களுக்குத் தீர்வு காண்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற பொறியாளர் குற்றச்சாட்டு:
மின்வாரியத்தின் இந்த புதிய உத்தரவு குறித்துச் சன் நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த ஓய்வுபெற்ற மின் பிரிவு செயற்பொறியாளர் திரு. நீலகண்ட பிள்ளை, “இந்த உத்தரவு என்பது பொதுமக்களின் சிரமத்தைக் குறைப்பதற்கான நிஜமான நடவடிக்கை அல்ல; இது அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் பிறப்பிக்கப்பட்ட ஒரு விளம்பர உத்தி மற்றும் கண் துடைப்பு நடவடிக்கை” என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். வெயில் காலம் உச்சத்திலிருந்த ஜூன், ஜூலை மாதங்களில் மின் பயன்பாடு அதிகமாக இருந்திருக்கும். அதைவிடக் குளிர்ந்த காலநிலையைக் கொண்ட செப்டம்பர், அக்டோபரில் பயன்பாடு 20% அதிகரிக்கும் எனக் கூறி ஆய்வு செய்வோம் என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 500 யூனிட்டுக்குக் கீழ் பயன்படுத்தும் சாமானிய மக்களுக்கு மீட்டர் கோளாறு மற்றும் ரீடிங் தவறுகளால் அதிக கட்டணம் வரும்போது, அவர்களை விட்டுவிட்டு 500 யூனிட்டுக்கு மேல் உள்ளவர்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்.. பயணிகள் விரைந்து முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்!!
பணியாளர் பற்றாக்குறையும், குளறுபடியும்:
மின் கட்டணக் குளறுபடிகளுக்கு முதன்மையான காரணம் மின் வாரியத்தில் நிலவும் கடுமையான பணியாளர் பற்றாக்குறைதான் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மாநிலத்தில் சுமார் 3.5 கோடி மின் நுகர்வோர்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய நுகர்வோர்கள் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால், கணக்கீடு செய்யும் அசஸர் பணியிடங்களில் சுமார் 60% காலியாகவே உள்ளன. 7,500 பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 2,500 பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ஆட்கள் இல்லாததால் நேரில் சென்று ரீடிங் எடுக்காமல், ‘டேபிள் ரீடிங்’ முறையில் தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. ஸ்லாப் சிஸ்டம் முறையில் சில யூனிட்டுகள் கூடினாலும் கட்டணம் பெருமளவு உயர்ந்துவிடும் என்பதால், முறையான கணக்கீடு இல்லாததால் சாமானிய மக்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் விளக்கமளித்தார்.