நண்பருடன் அவுட்டிங் சென்றபோது சோகம்.. மின்கம்பியில் கை பட்டதால் ஏற்பட்ட விபரீதம்.. சென்னையில் மாணவர் பரிதாப பலி!
College Student Dies Electrocution : சென்னை மாவட்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்கப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகன் ஜெயச்சந்திரன் ( 18 வயது). இவர், சென்னை மாவட்டம், நந்தனம் பகுதியில் செயல்பட்டு வரும் கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. 2- ஆம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக மாணவர் ஜெயச்சந்திரன் மயிலாப்பூர், கபாலி தோட்டம் பகுதியில் உள்ள அரசு மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்து கல்லூரி படிப்பை படித்து வந்தார். இந்த நிலையில், ஜெயச்சந்திரன் தனது நண்பர் யுவராஜ் என்பவர் உடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வெளியே சென்றிருந்தார். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு இன்று சனிக்கிழமை அதிகாலை மீண்டும் விடுதிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அவர்கள், விடுதி அருகே சென்ற போது, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரை மாணவர் ஜெயச்சந்திரன் தாண்ட முயற்சி செய்ததாக தெரிகிறது.
மின்சாரம் பாய்ந்து தூக்கி விசப்பட்ட மாணவர்
அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த மின் கம்பத்தில் ஜெயச்சந்திரனின் கை தெரியாமல் பட்டுள்ளது. இதில், ஏற்கெனவே, அந்த மின் கம்பத்தில் மின் கசிவு இருந்துள்ளது. இதனால், திடீரென பாய்ந்த மின்சாரம் மாணவர் ஜெயச்சந்திரனை தூக்கி வீசியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது நண்பர் அவரை உடனடியாக மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் படிக்க: கோவில்பட்டியில் திடுக்கிடும் சம்பவம்.. ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் விபரீத முடிவு.. பின்னணி என்ன?




மருத்துவர்கள் பரிசோதித்ததில் உயிரிழந்த மாணவர்
அங்கு, மாணவர் ஜெயச்சந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் சோகம்
தொடர்ந்து, இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நந்தனம் பகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் மட்டும் இன்றி அவரது குடும்பத்தினர் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கோவையில் பட்டப்பகலில் ரூ.1.6 கோடி வழிப்பறி.. தப்பியோடிய கொள்ளை கும்பல்.. உளுந்தூர்பேட்டையில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை!