பேரவையில் கேள்வி கேட்டது குற்றமா? லஞ்ச ஒழிப்பு ரெய்டு குறித்து முன்னாள் அமைச்சர் கே.என். நேரு ஆவேசம்!
K.N. Nehru Explains Anti Corruption Raid : திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு தொடர்புடைய இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இதற்கு, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைதான் காரணம் என்றார்.
தமிழகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு மற்றும் அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட சுமார் 19 இடங்களில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று காலை சுமார் 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை எனது வீடு மற்றும் எனது சகோதரர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், எந்த விதமான ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். என்னை பொருத்தவரை நான் எந்த விதமான தவறையும் செய்யவில்லை.
பேரவையில் கேள்வி எழுப்புவதால் லஞ்ச ஒழிப்பு சோதனை
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி வெல்வோம். எனது அலுவலகத்தில் இருந்து வழக்கமான ஒரு பைல், வரவு செலவு கணக்கு எழுதி வைத்திருந்த துண்டு சீட்டை மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் அரசை நோக்கி நான் கேள்வி எழுப்புவதால், என்னை மிரட்டுவதற்காக கூட இது போன்ற சோதனைகளை அவர்கள் செய்யலாம். இந்த சோதனை முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை தான். தற்போது வரை எனது வீட்டில் 3- ஆவது முறையாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: பழங்குடிகளிடம் ரூ.1 கோடி லஞ்சம்.. சிக்கிய 6 வனத்துறை ஊழியர்களுக்கு செக்.. திருவண்ணாமலையில் அதிரடி நடவடிக்கை..!
கட்சி நிதி பெற்ற புகாரில் நடந்த சோதனை
கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களிடமிருந்து பார்ட்டி ஃபண்ட் பெற்றதாகவும், அது தொடர்பான நடவடிக்கையின் காரணமாக இந்த சோதனை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி, கே. என். நேரு தொடர்புடைய சென்னை, திருச்சி, அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட 19 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டிருந்தது. இதேபோல, நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
திமுகவினர் தொடர்புடைய இடங்களில் தொடர் சோதனை
அரசு டெண்டர்களில் கட்சி நிதி என்ற பெயரில் சட்ட விரோதமாக நடந்த வசூல் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இன்று நடைபெற்ற இந்த திடீர் சோதனையால் திமுக கட்சி வட்டாரத்திலும், நேருவின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை.. திட்டவட்டமாக தெரிவித்த மாநில செயலர் மு. வீரபாண்டியன்!