ஏடிஎம்-ஐ உடைக்க முடியாததால் ஆத்திரம்.. ரூ.10 லட்சத்துடன் மெஷினையே அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்.. திருவள்ளூரில் துணிகரம்!
Thiruvallur ATM Machine Stolen : திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றும் முடியாததால் அந்த இயந்திரத்தை ரூ. 10 லட்சம் ரொக்கத்துடன் அலேக்காக தூக்கி சென்ற கொள்ளை கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கோடம்பாக்கம் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளை அடிக்க முயன்றனர். ஆனால், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால், அந்த இயந்திரத்தின் அடிப்பகுதியை அப்படியே பெயர்த்து எடுத்த அந்த மர்ம கும்பல் அலேக்காக தூக்கிச் சென்றது. பின்னர், மறுநாள் காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஏடிஎம் மையத்தை பார்த்தபோது ஏடிஎம் இயந்திரம் இல்லாததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்துக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் மோப்ப நாய்- தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு
அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏடிஎம் மையம் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில், கொள்ளை கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அலேக்காக தூக்கிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
மேலும் படிக்க: பழங்குடிகளிடம் ரூ.1 கோடி லஞ்சம்.. சிக்கிய 6 வனத்துறை ஊழியர்களுக்கு செக்.. திருவண்ணாமலையில் அதிரடி நடவடிக்கை..!
கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 10 லட்சம்
அந்த கொள்ளை கும்பல் தங்களது முகம் மற்றும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக, முகத்தை மறைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தனியார் வங்கி நிர்வாகம் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை அடிக்கப்பட்ட ஏ. டி. எம். இயந்திரத்தில் ரூ. 10 லட்சம் ரொக்கம் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொள்ளை கும்பலுக்கு வலை வீசிய போலீசார்
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார், அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பது குறித்தும், சம்பவ இடத்தில் பதிவான செல்போன் சிக்னல்கள், அந்த சாலை பகுதியில் அமைந்துள்ள மற்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆகியவற்றை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை சம்பவம் நடக்க முயன்றதும், அது முடியாததால் ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க : டபராவில் பெண் உடல் வேகவைக்கப்பட்ட சம்பவம்.. ஆக்ரா போலீசுக்கு சென்னை போலீஸ் அவசர கடிதம்.. என்ன காரணம்!