பழங்குடிகளிடம் ரூ.1 கோடி லஞ்சம்.. சிக்கிய 6 வனத்துறை ஊழியர்களுக்கு செக்.. திருவண்ணாமலையில் அதிரடி நடவடிக்கை..!
Forest Department Officials Suspended : திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு நிலத்தை பட்டா மாற்றம் செய்து தருவதாக கூறி பழங்குடியின, மலைவாழ் மக்களிடம் ரூ. 1 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் 6 வனத்துறை ஊழியர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை பட்டா போட்டு தருவதாக ஆசை வார்த்தை கூறி மலைவாழ் மக்களிடம் ரூ. 1 கோடி லஞ்சம் பெற்ற புகாரின் அடிப்படையில் 6 வனத்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதியில் காப்பு காடுகள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் ஏராளமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வனத்துறையை சேர்ந்த ஊழியர்கள் சிலர் அங்கு சென்று பழங்குடியின மக்களிடம் அரசுக்கு சொந்தமான வன நிலங்களை குடியிருப்பு வகையாக மாற்றம் செய்து வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர். இதற்காக, பணம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், ஜவ்வாது மலை காப்புக்காடு பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களிடம் இருந்து சுமார் ரூ. 1 கோடி வரை வனத்துறை ஊழியர்கள் லஞ்சமாக வசூல் செய்துள்ளனர்.
பழங்குடியின மக்களிடம் ரூ. 1 கோடி லஞ்சம் பெற்று மிரட்டல்
ஆனால், வனத்துறை ஊழியர்கள் தெரிவித்தது போல தற்போது வரை அந்த நிலத்துக்கான பட்டம் எதுவும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியர்களிடம் பழங்குடி மக்கள் கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வாங்கப்படவில்லை எனில் இடத்தை காலி செய்ய நேரிடும் என வனத்துறை ஊழியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அச்சமடைந்த பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் இது தொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: திருச்சூர் கோர விபத்து.. 8 பேரின் உயிரைப் பறித்ததன் காரணங்கள் என்ன?.. கள நிலவரமும் பின்னணியும்!!




வனத்துறை ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்
அந்த புகாரின் அடிப்படையில் லஞ்சம் பெற்ற வனச்சரகர் மணிவண்ணன், வெங்கடேசன், ஆனந்தகுமார் மற்றும் வனத்துறை ஊழியர்களான சண்முகம், சரவணன் ஜெயக்குமார் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.
வனத்துறை ஊழியர்களிடம் தொடர் விசாரணை
அதன் அடிப்படையில், புகாருக்குள்ளான வன ஊழியர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களை மிரட்டி அரசு நிலத்தை குடியிருப்பு வகையாக மாற்றி பட்டா பெற்று தருவதாக கூறி ரூ.1 கோடி லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 6 வனத்துறை ஊழியர்களும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: கேரளாவில் நடந்த கோர விபத்து – அப்பளம் போல் நொறுங்கிய கார்.. தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழப்பு..