AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்.. ஊராட்சி செயலரை பொறி வைத்து தூக்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ்.. திண்டுக்கல்லில் அதிரடி!

Panchayat Secretary Arrested : திண்டுக்கல் மாவட்டத்தில் சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு ரூ. 4 ஆயிரம் லஞ்சம் பெற்ற பூம்பாறை ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்.. ஊராட்சி செயலரை பொறி வைத்து தூக்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ்.. திண்டுக்கல்லில் அதிரடி!
மாதிரிப் புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 05 Sep 2026 15:28 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை பகுதியில் வசித்து வருபவர் ராஜா. விவசாயியான இவர், தனது தந்தை பெயரில் உள்ள சொத்து வரியை தனது பெயரில் மாற்றி தருமாறு பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அவரிடம், ஊராட்சி செயலாளர் முருகேசன் சொத்துவரி பெயரை மாற்றி தருவதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று விவசாயி ராஜா தெரிவித்துள்ளார். இதனை ஏற்க மறுத்த ஊராட்சி செயலர் முருகேசன் பேரம் பேசத் தொடங்கினார். இதில், ரூ. 4 ஆயிரம் தர வேண்டும் என்று ஊராட்சி செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால், விவசாயி ராஜாவுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை. இதனால், அவர் அங்கிருந்து தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

லஞ்சம் தரவில்லையெனில் சொத்து வரி பெயர் மாற்றம் செய்யமுடியாது

தொடர்ந்து, மறுநாள் அவரை செல்போனில் தொடர்பு கொண்ட ஊராட்சியை செயலாளர் முருகேசன், தான் கேட்ட லஞ்ச பணத்தை தர வேண்டும் எனவும், அவ்வாறு தரவில்லை எனில் சொத்து வரி பெயர் மாற்றம் செய்து தர மாட்டேன் எனவும் மிரட்டி உள்ளார். இதனால், கடும் அதிருப்தி அடைந்த விவசாயி ராஜா இது தொடர்பாக திண்டுக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் ராஜாவிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஊராட்சி செயலரிடம் வழங்குமாறு அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க: தவெக தலைவர்களின் மெகா பிளான்.. கம்யூனிஸ்ட் கட்சிகளை ஈர்க்குமா விஜய் தரப்பின் புதிய வியூகம்?

ஊராட்சி செயலர் உள்பட இருவர் அதிரடி கைது

அதன் அடிப்படையில், சம்பவத்தன்று பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில் செயலாளர் முருகேசனிடம் ரூ. 4 ஆயிரம் லஞ்ச பணத்தை விவசாயி ராஜா கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் ஊராட்சி செயலாளர் முருகேசனை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தற்காலிக கணினி ஆபரேட்டர் ராஜா சண்முகத்தையும் போலீசார் கைது செய்தனர்.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த இந்த கைது நடவடிக்கை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் படிக்க: “தப்புனா தப்புதான்.. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்!”.. டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி!!

Follow Us