AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரேஷன் கார்டு விண்ணப்பங்களில் புதிய மாற்றம்.. கவலையே வேண்டாம்.. இனி அலையத் தேவையில்லை!!

New Ration Card Rules: புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களுக்கு எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயம் இல்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி முகவரி சான்றாக ஆதார், மின்சாரக் கட்டண ரசீது உள்ளிட்ட மாற்று ஆவணங்களை வழங்கி எளிதாக ரேஷன் கார்டு பெறலாம்.

ரேஷன் கார்டு விண்ணப்பங்களில் புதிய மாற்றம்.. கவலையே வேண்டாம்.. இனி அலையத் தேவையில்லை!!
ரேஷன் அட்டை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 06 Sep 2026 10:22 AM IST

செப்டம்பர், 06: தமிழகத்தில் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு என்பது எளிய மக்களின் உணவுப் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும், முதன்மையான முகவரி சான்றாகவும் விளங்கி வருகிறது. புதிதாகத் திருமணமான தம்பதியினர், கூட்டுவட்டாரக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடும்பமாக வாழ்வோர் மற்றும் புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்போர் பலர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் (தாலுகா ஆபீஸ்) சந்திக்கும் முக்கியச் சவால்களில் ஒன்றாக கேஸ் பில் கோரப்படும் நடைமுறை இருந்து வந்தது. சமையல் எரிவாயு இணைப்பு இல்லாதவர்கள் அல்லது உடனடியாக இணைப்பு பெற முடியாதவர்கள் இதனால் ரேஷன் கார்டு பெற முடியாமல் பெரும் சிரமங்களைச் சந்தித்து வந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் இந்த நீண்டகால சிரமத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உணவுப்பொருள் வழங்கல் துறை ஒரு முக்கியமான மற்றும் நிம்மதியளிக்கும் தெளிவுரையை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்.. பயணிகள் விரைந்து முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்!!

உணவுப்பொருள் வழங்கல் துறையின் விளக்கம்:

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் குறித்துப் பேசிய உணவுப்பொருள் வழங்கல் துறை துணை கமிஷனர் ராகிணி ரவிச்சந்திரன், சமையல் எரிவாயு உருளை ரசீது என்பது முகவரிச் சான்றுகளுக்காகக் கோரப்படும் பல ஆவணங்களில் ஒன்றுதானே தவிர, அதுவே கட்டாய ஆவணம் கிடையாது எனத் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார். சில வட்ட வழங்கல் அலுவலகங்களில் அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் கேஸ் பில்லைக் கட்டாயமாகக் கேட்டு விண்ணப்பங்களை நிராகரிப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எல்.பி.ஜி கேஸ் இணைப்பு இல்லாதவர்களும் இனி எவ்விதத் தடையுமின்றி புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:

கேஸ் பில் இல்லாதவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு மாற்றாகப் பல்வேறு எளிய ஆவணங்களை முகவரிச் சான்றாகப் பயன்படுத்தலாம். குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் அடையாளச் சான்று, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களின் பிறப்புச் சான்றிதழ், மற்றும் குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை முதன்மை ஆவணங்களாகத் தேவைப்படும். முகவரிச் சான்றாகக் கேஸ் பில்லுக்குப் பதிலாக மின்சாரக் கட்டண ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, வாடகை வீட்டில் குடியிருப்போர் வாடகை ஒப்பந்தப் பத்திரம், வங்கிப் புத்தகத்தின் முதல் பக்கம் அல்லது பாஸ்போர்ட் ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்தாலே போதுமானது.

இதையும் படிக்க: Tamil Nadu Weather Alert: ஒருபக்கம் வெயில்.. மறுபக்கம் மழை.. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை நிலவரம் இதோ!

ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கும் முறை:

பொதுமக்கள் இதற்காக யாருக்கும் லஞ்சம் கொடுக்கவோ அல்லது அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று பலமுறை அலையவோ தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே தங்கள் கைபேசி வாயிலாக TNPDS அதிகாரப்பூர்வ இணையதமான tnpds.gov.in மூலம் மிக எளிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கணினி வசதி இல்லாதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்குச் சென்றும் தங்களது புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இனிமேல் கேஸ் ரசீது இல்லை என்ற காரணத்தைக் கூறி எந்த அதிகாரியும் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us